×

ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து குடந்தையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், டிச. 18: ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து கும்பகோணத்தில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நேற்று காலை முதல் மதியம் வரை கும்பகோணம் பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும், இந்திய பொருளாதாரத்தை சீர் குலைக்கும், தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி கும்பகோணம் காந்தி பூங்கா அருகே தஞ்சை சோழமண்டல தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கும்பகோணம் அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் சோழாமகேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் சத்தியநாராயணன் வரவேற்றார். மாநில துணை தலைவர்கள் பாண்டியன், தென்னரசு, சுப்பிரமணியன், சிவசுப்பிரமணியன், ஞானசேகரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஜவுளி வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு வர்த்தகர் நல கழகம், நகை வியாபாரிகள் நலச்சங்கம், நுகர்பொருள் வினியோக சங்கம் உள்பட 16 வர்த்தக சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கும்பகோணத்தில் மதியம் 12 வரை வியாபாரிகள் அனைத்து கடைகளையும் அடைத்தனர். இதனால் பெரிய கடைத்தெரு, நாகேஸ்வரன் கோயில் தெற்கு வீதி, கும்பேஸ்வரர் கோயில் வடக்கு வீதி, மடத்துத்தெரு, ஆயிகுளம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மதியம் வரை வெறிச்சோடி காணப்பட்டது.

Tags : Merchants ,Kundana ,
× RELATED மதுரையில் வணிகர்கள் சங்கங்களின்...