×

சேலத்தில் துணிகரம் பெண் மீது மிளகாய் பொடி தூவி 5 பவுன் நகை பறிப்பு

சேலம், டிச.17:சேலத்தில் பெண்ணின் முகத்தில் மிளகா பொடி தூவி 5 பவுன் நகையை பறித்துச் சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் அன்னதானப்பட்டி பாஞ்சாலிநகரை சேர்ந்தவர் அன்பழகன் (45), சீலநாயக்கன்பட்டியில் இரும்பு கடை வைத்துள்ளார். இவரது மனைவி சத்யா (40). இவர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு அருகே உள்ள கடைக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பினார். பின்னர், கதவை சாத்திவிட்டு குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, வீட்டுக்கதவை தட்டி, அக்கா என ஒரு வாலிபர் அழைத்தார். இதனால், வெளியே வந்த சத்யா, கதவை திறந்துள்ளார். அந்த நேரத்தில் அந்த வாலிபர், கையில் வைத்திருந்த மிளகா பொடியை சத்யாவின் முகத்தில் வீசி, அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினார். வீட்டிற்குள் இருந்து அன்பழகன் வெளியே வருவதற்குள் ஓட்டம் பிடித்தார். இதுபற்றி அன்னதானப்பட்டி போலீசில் சத்யா புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள வீடுகளில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால், கொள்ளையனை அடையாளம் காண முடியவில்லை. ஆனால், தெரிந்த நபர் தான், இந்த நகை பறிப்பில் ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகித்துள்ளனர். அதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : boutique girl ,Salem 5 ,
× RELATED பணம், தங்க காசு கொள்ளை