×

பழுதடைந்து காணப்படும் பேருந்து நிறுத்தங்கள்

காரைக்கால், டிச. 13:  காரைக்காலில் அரசு பொது மருத்துவமனை  பேருந்து நிறுத்தம், எம்ஓஹெச் பேருந்து நிறுத்தம், தலத்தெரு பேருந்து நிறுத்தம், கீழகாசாகுடி பேருந்து நிறுத்தம், வடமட்டம் பேருந்து நிறுத்தம் உள்பட நிரவி, திருப்பட்டினம்., விழிதியூர், அம்பகரத்தூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் கட்டி முடித்து பல வருடங்கள் ஆகிறது. இப்பேருந்து  நிறுத்தங்கள் மட்டுமின்றி அண்மையில் கட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் வரை முறையான பராமரிப்பு இல்லை. இதனால் பேருந்து நிறுத்தம் குப்பை கூளமாகவும், கால்நடைகள், பிச்சைக்காரர்கள்,  சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளது. பல பேருந்து நிறுத்தங்களை நெருங்க கூட முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சில பேருந்து நிறுத்தங்கள் இடியும் தருவாயில் உள்ளது. இன்னும் சில பேருந்து நிறுத்தங்கள் 5 பேர் கூட அமர முடியாத அளவுக்கு இடநெருக்கடியும் உள்ளது.  இதனால் காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் மற்றும் பொதுமக்கள்  மழையிலும் வெயிலிலும் சாலையில் நின்றவாறு அவதியுற்று வருகின்றனர். இதன் காரணமாக விபத்துகளும் நடக்கிறது.

எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களை    நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் சமூக ஆர்வலர்கள் தொழில் நிறுவனங்கள் சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, காரைக்காலில் உள்ள எம்ஓஹெச், கீழகாசாகுடி  உள்ளிட்ட பல்வேறு பேருந்து நிறுத்தங்களின் இருக்கைகள் முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இதன் காரணமாக பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. மேலும் பல பேருந்து நிறுத்தம்  அசுத்தமான நிலையில் உள்ளது. துர்நாற்றமும் வீசி வருகிறது. இடிந்து விழும் நிலையிலும் காணப்படுகிறது. இதனை ஆய்வு செய்து, பேருந்து நிறுத்தத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இது பற்றி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அசுத்தமான நிலையில் காணப்படுகிறது, இதனால் இதனை பயன்படுத்த முடியவில்லை. மழை நேரங்களில் பேருந்து நிறுத்தத்தில்  நிற்க முடியவில்லை.   ஆடு, மாடுகள் உள்ளிட்ட பல்வேறு கால்நடைகளும் இருப்பிடமாக மாற்றி, நாசம் செய்து விடுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. ஆகையால் பேருந்து நிறுத்தங்களை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்றனர். முதல் கட்டமாக, காரைக்கால் நகர் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் அதிநவீன வசதிகளுடன் கால்நடைகள் புகாவண்ணம் தடுப்புகள் ஏற்படுத்தி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்த வேண்டும். கும்பகோணம் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் ஏசி பேருந்து நிறுத்தம் இயங்கி வருகிறது. காரைக்காலில் அத்தகைய வசதிகள் இல்லாவிட்டாலும் முறையான பராமரிப்பு இருக்க வேண்டும். மேலும் பேருந்து நிறுத்தத்தை கண்காணிக்க குழு அமைத்து, அதனை பராமரிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags : bus stops ,
× RELATED பெரம்பூரில் 2 பஸ் நிறுத்தங்களில் ரூ.22...