×

கூட்டுறவு ஆலைகளில் பசுந்தேயிலைக்கு குறைந்த மாதவிலை நிர்ணயம்

மஞ்சூர், டிச.12: கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பசுந்தேயிலைக்கான நவம்பர் மாதத்திற்கான விலை குறைத்து நிர்ணயித்ததால் விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் 16 கூட்டுறவு ஆலைகளும், 100க்கும் மேற்பட்ட தனியார் ஆலைகளும் இயங்கி வருகின்றன. இதில் கூட்டுறவு தொழிற்சாலைகளில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களிடம் இருந்து தினசரி கொள்முதல் செய்யப்படும் பசுந்தேயிலைக்கு மாதம் ஒருமுறை இண்ட்கோசர்வ் நிறுவனத்தின் மூலம் மாதவிலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

 இதில் கட்டபெட்டு கூட்டுறவு தொழிற்சாலையில் மட்டும் வாராந்திர விலை வழங்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து சம்மந்தப்பட்ட கூட்டுறவு ஆலைகள் முலம் விவசாயிகளுக்கு பசுந்தேயிலைக்கான தொகை வழங்கப்படும்.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த பசுந்தேயிலைக்கு மாதவிலை நிர்ணயம் செய்வதற்கான அதிகாரிகள் கூட்டம் குன்னூர் இண்ட்கோசர்வ் அலுவலகத்தில் நடந்தது. இதில் மஞ்சூர், கைகாட்டி, கூடலுார் சாலீஸ்பரி கூட்டுறவு தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை கிலோவிற்கு ரூ. 11 ஆகவும், பந்தலூர் தொழிற்சாலையில் ரூ.10.50 மற்றும் பிக்கட்டி, மேற்குநாடு, இத்தலார், நஞ்சநாடு, கிண்ணக்கொரை, மகாலிங்கா, கரும்பாலம், எப்பநாடு, பிதர்காடு, பிராண்டியர் ஆகிய கூட்டுறவு ஆலைகளில் பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ. 10 ஆகவும் மாதவிலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே கூட்டுறவு தொழிற்சாலைகளில் பசுந்தேயிலைக்கான மாதவிலை படிப்படியாக குறைந்து வருகிறது. பெரும்பாலான தொழிற்சாலைகளிலும் கிலோவிற்கு வெறும் 10 ரூபாயாக மாதவிலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பசுந்தேயிலைக்கு குறைந்த விலையால் தொழிலாளர்கள் கூலி, தோட்டப் பராமரிப்பு, அன்றாட குடும்ப செலவினங்களை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

Tags : greenhouses ,plants ,
× RELATED பீட்ரூட் கீரை மசியல்