×

நெல்லிக்காய் சேகரிக்க வனத்துறை அனுமதிக்க வேண்டும்

ஈரோடு, டிச. 4: புலிகள் காப்பகம் பகுதியில் நெல்லிக்காய் உள்ளிட்ட வனப்பொருட்களை சேகரிக்க இந்தாண்டு வனத்துறையினர் அனுமதி வழங்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் வலியுறுத்தி உள்ளனர். வனப்பகுதிகளில் உள்ள நெல்லிக்காய், கடுக்காய், சீமார்புல், அரப்பு, தேன் உள்ளிட்ட வனப்பொருட்களை சேகரித்து மலைவாழ் மக்கள் சந்தைப்படுத்தி வந்தனர். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு தங்களது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். இந்நிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பின்னர் வனப்பகுதியில் வன மகசூல் சேகரிக்க வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நெல்லிக்காய் மகசூல் சேகரிக்க பழங்குடியினருக்கு வனத்துறை தடை விதித்தது. வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் மான், கரடி போன்ற வன விலங்குகளுக்கு நெல்லிக்காய் தேவைப்படும் எனவே அனுமதி வழங்க முடியாது என்று வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தாண்டு வனப்பகுதியில் நல்ல மழை பெய்துள்ளதால், வனப்பகுதி முழுவதும் பசுமை படர்ந்து, நெல்லிக்காய் விளைச்சலும் அதிக அளவில் உள்ளதால் பழங்குடியினருக்கு இந்தாண்டு நெல்லிக்காய் மகசூல் சேகரிக்க வனத்துறை அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து பவானிசாகர் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் கூறியதாவது: பழங்குடியின மக்களுக்கான உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது. இயற்கையோடு சேர்ந்து வாழ்ந்து வரும் பழங்குடி மக்களை வனத்தை விட்டு வெளியேற்ற மத்திய, மாநில அரசுகளின் புதிய சட்டங்கள் வழி வகுக்கிறது. சத்தி வனப்பகுதியானது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பழங்குடியினரின் வன உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நெல்லிக்காய் மகசூல் என்பது பழங்குடியினரின் முக்கிய மகசூலாக இருந்து வருகிறது. வறட்சியை காரணம் காட்டி கடந்த 2 ஆண்டுகளாக வனத்துறையினர் தடை விதித்துவிட்டனர். இந்தாண்டு வனப்பகுதியில் வறட்சி நீங்கி, பசுமை படர்ந்துள்ளதால் நெல்லிக்காய் மகசூல் சேகரிக்க அனுமதி வழங்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு சுந்தரம் கூறினர்.

Tags : Forest Department ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை...