×

மார்த்தாண்டத்தில் நள்ளிரவில் துணிகரம் பிரபல வணிக வளாகத்தில் கடைகளை உடைத்து லேப் டாப், பணம் கொள்ளை கண்காணிப்பு கேமராவில் சிக்கிய கொள்ளையன்

மார்த்தாண்டம், டிச. 4 : மார்த்தாண்டத்தில் பிரபல வணிக வளாகத்தில் கடைகளை உடைத்து லேப் டாப்புகள், ₹85 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள். குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பிரபல வணிக வளாகம் அமைந்துள்ளது. தரை தளத்துடன் சேர்த்து மொத்தம் 4 தளங்களை கொண்ட இந்த வணிக வளாகத்தில் சுமார் 70 கடைகள் உள்ளன. இந்த வணிக வளாகத்தின் 2 வது தளத்தில் பென்சிகர் என்பவர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். நேற்று காலை இவரது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது. இதே போல் இவரது கடைக்கு அருகில் கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனம் உள்ளது. அங்கும் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து அறிந்ததும் கடையின் உரிமையாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். மார்த்தாண்டம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தக்கலை டி.எஸ்.பி. ராமச்சந்திரன் மற்றும் மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதில் கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனத்தில் 6 புதிய லேப் டாப்களும், சர்வீசுக்காக வந்திருந்த 4 லேப் டாப்புகளும் திருடப்பட்டு இருந்தன. புதிய லேப் டாப் ஒன்றின் விலை ₹65 ஆயிரம் என கூறப்படுகிறது. மேலும் அங்கு மேஜை டிராயரில் இருந்த ₹85,000 பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. எலக்ட்ரானிக்ஸ் கடையில் பெரிய அளவில் பணம் இல்லை. மேஜையில் வைக்கப்பட்டு இருந்த ₹1000த்தை மட்டும் திருடி உள்ளனர்.

சம்பவம் நடந்த கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அந்த கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் கடப்பாரை கம்பி மற்றும் ஆயுதங்களால் கடையின் ஷட்டர் பூட்டை உடைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. முதலில் எலக்ட்ரானிக்ஸ் கடையில் ஷட்டர் பூட்டை உடைத்து தான் மர்ம நபர் உள்ளே நுழைகிறார். ஆனால் அங்கு பெரிய அளவில் பணம் இல்லாததால், அடுத்ததாக கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனத்தின் ஷட்டரை உடைத்து உள்ளே செல்கிறார்.
நள்ளிரவு 2.30க்கு வணிக வளாகத்துக்குள் நுழையும் நபர், மிகவும் சாவகாசமாக அமர்ந்து பொருட்களை திருடுகிறார். மேஜை டிராயரில் உள்ள பணத்தை மிகவும் பொறுமையாக எண்ணி, பையில் வைக்கிறார். அதிகாலை 5 மணிக்கு திருடிய பணம் மற்றும் பொருட்களுடன் வெளியேறுகிறார். தனது முகம் பதிவாகாமல் இருக்க கண்காணிப்பு கேமராவை திருப்பும் காட்சிகளும் பதிவாகி உள்ளன. இந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் பதிவாகி உள்ள நபர், பழைய குற்றவாளியாக இருக்கலாமா? என்ற கோணத்தில் தனிப்படை வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.இதில் அந்த வாலிபர், மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு பின்புறம் உள்ள கொடுங்குளம் பகுதியை சேர்ந்த ஜெசின் (22) என்பது தெரிய வந்துள்ளது. இவர் பிரபல கொள்ளையன் ஆவார். குமரி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களிலும், கேரளாவிலும் ெஜசின் மீது திருட்டு, கொள்ளை வழக்குகள் உள்ளன. சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த ஜெசினை, கேரள போலீசாரும் தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் தான், இந்த வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் ஜெசின் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெசினை தேடி வருகிறார்கள். கொள்ளை நடந்த கடையில் போலீஸ் மோப்ப நாய் ஏஞ்சல் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. வணிக வளாகத்தில் இருந்து மோப்பம் பிடித்தவாறு ஓடிய நாய், நேராக குழித்துறை ரயில் நிலைய  முதல் பிளாட்பாரத்தில் சென்று படுத்துக் கொண்டது. எனவே கொள்ளையன் ரயில் நிலையம் வரை நடந்து வந்து, பின்னர் அதிகாலையில் திருவனந்தபுரம் செல்லக்கூடிய ரயிலில் கேரளாவுக்கு தப்பி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். மார்த்தாண்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீப காலமாக கடைகள் மற்றும் வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்தன. உண்ணாமலைக்கடையில் பலசரக்கு கடையின் பூட்டை உடைத்து ₹1 லட்சத்து 17 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். மார்த்தாண்டத்தில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியரின் அறை கதவை உடைத்து உள்ளே இருந்த லேப் டாப்புகள் திருடப்பட்டன. எனவே இந்த சம்பவங்களில் எல்லாம் ஜெசினுக்கு தொடர்பு இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர் பிடிபட்டால் பல கொள்ளை சம்பவங்களில் துப்பு துலங்கும் என தனிப்படை போலீசார் கூறி உள்ளனர்.

காவலாளிகள் இல்லை
கொள்ளை நடந்த வணிக வளாகம் , குமரி மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான வணிக வளாகம் ஆகும். மார்த்தாண்டத்தின் மிகப்பெரிய வர்த்தக பகுதியாகவும் இந்த வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் காவலாளிகள் கிடையாது. இதே போல் ஒவ்வொரு கடையிலும் வைக்கப்பட்டு உள்ள கேமராக்கள், அவர்களின் கடைக்குள் மட்டும் தான் இருக்கிறது. வணிக வளாகத்தின் வராண்டா பகுதிகள், பின்புற பகுதிகள், நுழைவு வாயில் பகுதிகளை கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் இல்லை. ஏற்கனவே போலீசார் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து சுட்டிக்காட்டி, கேமராக்கள் பொருத்த வேண்டும் என கூறி இருந்தனர்.  ஆனால் இன்னும் கேமராக்கள் பொருத்த வில்லை. காவலாளிகளும் இல்லாமல் உள்ளனர். எனவே உடனடியாக காவலாளிகள் நியமிக்க வேண்டும் என்றும் போலீசார் கூறி உள்ளனர்.

செல்போன் கடை தப்பியது
வணிக வளாகத்தில் நுழைந்ததும், முதல் தளத்தில் உள்ள செல்போன்  கடை ஷட்டரை தான், கொள்ளையன் உடைக்கிறான். ஆனால் அந்த  கடையின் ஷட்டரில் நடுப்பகுதியிலும் பூட்டு இருந்ததால் ஷட்டரை திறக்க முடிய வில்லை. சுமார் 20 நிமிடங்கள் வரை போராடியும் ஷட்டரை திறக்க முடியாததால், 2 வது தளத்துக்கு சென்று விட்டான். இந்த காட்சிகள் கேமராவில் பதிவாகி உள்ளன. செல்போன் கடையின் ஷட்டர் திறந்து இருந்தால், உள்ளே இருந்த பல லட்சம் மதிப்பிலான செல்ேபான்களும் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும்.

Tags : Marthantham ,robber ,shopping mall ,shops ,
× RELATED தண்டையார்பேட்டையில் வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை: 5 பேருக்கு வலை