×

பொங்கல் பண்டிகை நெருங்குவதால் உருண்டை வெல்லம் மூட்டைக்கு ரூ.30 உயர்வு

ஈரோடு,  டிச. 1:    பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி சித்தோடு வெல்ல மண்டியில்  உருண்டை வெல்லம் மூட்டைக்கு ரூ.30 உயர்ந்துள்ளதால் உற்பத்தியாளர்கள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, முள்ளாம்பரப்பு,  கோபி, கவுந்தப்பாடி, அம்மாபேட்டை ஆகிய பகுதியில் 100க்கும் மேற்பட்ட  கரும்பாலைகளில் உருண்டை, அச்சு வெல்லம், நாட்டு சர்க்கரை உற்பத்தி  செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் ஈரோடு அடுத்த சித்தோடு வெல்ல மண்டிக்கு  சனிக்கிழமைதோறும் நடக்கும் ஏலத்தில் 30 கிலோ மூட்டைகளாக விவசாயிகள் விற்பனைக்கு  கொண்டு வருகின்றனர். வெல்லத்தை கொள்முதல் செய்ய ஈரோடு மட்டுமல்லாது  தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா,  தெலங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் மொத்த வியாபாரிகள் வாங்கி  செல்வர்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகை சீசன் விற்பனை துவங்கியுள்ளதால்,  சித்தோடு வெல்ல மண்டியில் நேற்று நடந்த ஏலத்தில் நாட்டு சர்க்கரை 2 ஆயிரம்  மூட்டையும், அச்சு வெல்லம் 1,100 மூட்டையும், உருண்டை வெல்லம் 6 ஆயிரம்  மூட்டையும் வரத்தானது. இதில், நாட்டுச்சர்க்கரை சிப்பம் (30 கிலோ) ரூ.1,100  முதல் ரூ.1,170 வரையும், அச்சு வெல்லம் ரூ.1,100 முதல் ரூ.1,150ம், உருண்டை  வெல்லம் ரூ.1,150 முதல் ரூ.1,200 வரையும் விற்பனையானது. இதில் உருண்டை  வெல்லம் மட்டும் கடந்த வாரத்தை காட்டிலும் மூட்டைக்கு ரூ.30 வரை  உயர்ந்ததால் வெல்ல உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். வரக்கூடிய  வாரங்களில் வெல்லத்தின் விலை மேலும் அதிகரிக்க கூடும் என வெல்ல மண்டி  நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags : festival ,Rs ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...