×

தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு சுவேத நதியில் ஆபத்து பயணம்

கெங்கவல்லி, நவ.29: கெங்கவல்லி பேரூராட்சி, தெற்கு காடு 14, 15வது வார்டு பகுதியில் சுமார் 1200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் சுவேத நதியின் மறுகரையில் உள்ளது. அங்கு சுமார் 1500 ஏக்கர் பரப்பில் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகளும், விவசாய பணிக்கு செல்லும் தொழிலாளர்களும், சுவேதா ஆற்றில் இறங்கி விளைநிலங்களுக்கு சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில், தொடர் மழையால் 10 ஆண்டுக்கு பின்பு சுவேத நிதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், 40 அடி கொள்ளளவு கொண்ட வலசக்கல்பட்டி ஏரி நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் சுமார் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஆற்றில் பெருக்கெடுத்துள்ளது. இதனால், ஆற்றில் இறங்கி அக்கரைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 14, 15வது வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள். தற்போது 74.கிருஷ்ணாபுரம் பாலம் வழியாக சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் கடந்து கெங்கவல்லி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் சுற்றி செல்லும் அவலநிலை உள்ளது. அதேவேளையில், ஆபத்தை உணராமல் விவசாயிகள் சிலர், ஆற்றை கடந்து செல்வதும் அதிகரித்துள்ளது. அப்போது, ஆற்றில் அடித்துச்செல்லப்படும் ஆபத்தும் நிலவுகிறது. எனவே, அக்கரை மாரியம்மன் கோயில் பகுதியில் சுவேத நதியில் தரைப்பாலம் அமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : flooding ,Swetha River ,
× RELATED தேனி அணைப்பிள்ளையார் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு..!!