×

ஈரோடு-மேட்டுப்பாளையம் இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற ஆய்வு பணி தீவிரம்

ஈரோடு, நவ.29: ஈரோட்டில் இருந்து மேட்டுப்பாளையம் வரை இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. இப் பணிகளை 15 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.ஈரோட்டில் இருந்து மேட்டுப்பாளையம் வரை இருவழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 270 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது. முதல்கட்டமாக, சித்தோட்டில் இருந்து கோபி வரை நான்குவழிச்சாலையாக மாற்றும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.இதில், 4 வழிச்சாலையாக மாற்ற தேவையான இடங்கள், ரோடு விரிவாக்கத்திற்காக தேவைப்படும் இடங்கள், மரங்கள் எவ்வளவு உள்ளது, எத்தனை வீடுகள் உள்ளது என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, சித்தோட்டில் இருந்து ஈரோடு பஸ் ஸ்டாண்ட் வரை இருவழிச்சாலை, 4 வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு பஸ் ஸ்டாண்ட், வீரப்பன்சத்திரம், சூளை, கனிராவுத்தர்குளம், தண்ணீர்பந்தல்பாளையம், கொங்கம்பாளையம் பகுதி வழியாக இந்த 4 வழிச்சாலை செல்கிறது. 8 கி.மீ. தூரத்திற்கு இந்த நான்குவழிச்சாலை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் 3 குழுக்களாக பிரித்து சர்வே பணி துவங்கி உள்ளது. இப் பணிகளில், 15க்கும் மேற்பட்ட நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ரோடு விரிவாக்கத்திற்கான ஆய்வு பணிகள் 15 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட அதிகாரிகள் கூறியதாவது:

சித்தோட்டில் இருந்து மேட்டுப்பாளையம் வரை இருவழிச்சாலையை, நான்குவழிச்சாலையாக மாற்றும் வகையில் திட்டமிடப்பட்டு அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு 270 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வு பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த நான்குவழிச்சாலையை ஈரோடு பஸ் ஸ்டாண்ட் வரை 8 கி.மீட்டருக்கு நீட்டிக்கப்பட உள்ளது. இதற்கான ஆய்வு பணி துவங்கப்பட்டுள்ளது.இந்த சாலைகள் அமைக்கும்போது வீடுகள், விவசாய நிலங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றை ரோடு பணிகளுக்காக எடுக்க வேண்டியது உள்ளது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரோட்டிற்கு இடங்களை கையகப்படுத்தும்போது நிலத்திற்கு போதிய அளவு இழப்பீடு கிடைக்காது என விவசாயிகள் புகார் தெரிவித்திருந்தனர்.இதுதொடர்பாக, விவசாயிகளிடமும் கருத்து கேட்கப்பட்டு அதற்கேற்ப முடிவு செய்யப்பட உள்ளது. தற்போது, ரோட்டின் அகலம் 8 மீட்டராக உள்ளது. ஆனால், இந்த ரோட்டை 4 வழிச்சாலையாக மாற்றும்போது சென்டர் மீடியன் அமைக்கவும், ரோடு போடவும் 15 மீ்ட்டர் இடம் தேவைப்படும். இதற்காக, ஈரோட்டில் இருந்து கொங்கம்பாளையம் வரை ரோடு எந்த வழியாக கொண்டு வருவது, இதில் உள்ள மரங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகளை முடித்து திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு கூடுதல் நிதியை பெற்று பணிகள் துவங்கும். இந்த பணிகளை துவங்க 2 ஆண்டுகள் ஆகும்.

Tags : road ,Mettupalayam ,Erode ,
× RELATED கோடை சீசனை ஒட்டி உதகை –...