கூடலூர் அருகே வாய்க்கால் குழியில் 2 லாரிகள் சிக்கியது

கூடலூர், நவ.29:கூடலூரில் இருந்து கர்நாடக மாநிலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மார்தோமா நகர் பகுதியில் சாலையின் குறுக்கே உள்ள வாய்க்காலில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு பக்கம் குழாய் பதிக்கப்பட்ட நிலையில் வாகனங்கள் ஒரு வழியாக சென்று வருகின்றன. நேற்று அதிகாலை இந்த வழியாக வந்த சரக்கு லாரி ஒன்று குழாய் பதிக்கப்பட்ட குழியில் சிக்கியதால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து காலை 6 மணியளவில் லாரியை மீட்டு போக்குவரத்தை சீரமைத்தனர். அதைத்தொடர்ந்து 8 மணியளவில் மீண்டும் லாரி ஒன்று சிக்கியதால் மேலும் ஒரு மணி நேரம் போக்குவரத்து முடங்கியது.  இதனால் மைசூர், பெங்களூர் பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு வந்த பேருந்துகள் குறித்த நேரத்தில் செல்லமுடியாமல் சிரமப்பட்டன.இதேபோல் காலை நேரத்தில் வனத்துறை சோதனைச்சாவடி திறக்கப்பட்ட பின் வந்த வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தாமதமாக சென்றன. உள்ளூரில் பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன.எனவே சாலை பணிகள் நடைபெறும் பகுதிகளில் அறிவிப்பு பலகைகள் வைக்கவும், போக்குவரத்து காவலர்களை பணியில் அமர்த்தி போக்குவரத்து தடை ஏற்படாமல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>