×

துப்புரவு பணியாளர் பணிக்கான நேர்காணல் முதுகலை பட்டதாரிகள் குவிந்தனர்: அதிகாரிகள் அதிர்ச்சி

கோவை,நவ.28: கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள 549 துப்புரவு தொழிலாளர்கள் காலிப்பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் பங்கேற்றதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். கோவை மாநகராட்சியில் உள்ள மத்திய, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய ஐந்து மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளிலும் 549 துப்புரவு தொழிலாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. துப்புரவு தொழிலாளர்கள் பற்றாக்குறையால் குப்பைகளை அள்ளுவது, சுகாதார பணிகளை மேற்கொள்ளுவது போன்ற பணிகளில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து காலியாக உள்ள துப்புரவு தொழிலாளர்கள் பணிகளுக்கு விண்ணப்பங்கள் மாநகராட்சி சார்பாக வரவேற்கப்பட்டன. தமிழ் எழுதப்படிக்க தெரிந்தால் போதும் என மட்டும் கல்வி தகுதி குறிப்பிட்டிருந்தது. இதில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான நேர்காணல் மாநகராட்சியில் நேற்று மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் நடந்தது. முதல் நாளாகிய நேற்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று கலந்து கொண்டனர். இதில் 500க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் கலந்துகொண்டனர். எம்.இ, எம்.எஸ்.சி, பி.எஸ்.சி, பி.எட் போன்ற பட்டதாரிகளும் துப்புரவு பணியிடத்திற்கு விண்ணப்பித்து நேர்முகத் தேர்வில் பங்கேற்றதால் மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ இந்த நேர்காணல் நிகழ்ச்சி தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கிறது. இதில் விண்ணப்பித்த மனுதாரர்கள் நேர்காணலின் போது காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஏற்ப தேர்வு செய்யப்படுவார்கள். கல்வி தகுதி தமிழ் எழுதப்படிக்க தெரிந்தால் போதுமானது என்பது மட்டும் தான் ஆனால் இதில் இன்று முதல் நாளே எம்.இ போன்ற படித்த பட்டதாரி இளைஞர்கள் பங்கேற்றனர். இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இன்னும் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நேர்காணலில் கலந்துகொள்ள போகிறார்கள் என தெரியவில்லை,’’ என்றார்.
இதுகுறித்து நேர்காணலில் கலந்துகொண்ட இளைஞர் ஒருவர் கூறுகையில், ‘‘மாத சம்பளம் ரூ.17 ஆயிரம் தரப்படுகிறது. படித்துவிட்டு வேலையில்லை, குடும்ப கஷ்டம் என்ன செய்வது என தெரியவில்லை ஆகையால் தான் இந்த பணிக்கு விண்ணப்பித்து நேர்காணலில் கலந்துகொண்டேன்,’’ என்றனர்.
தற்காலிகமாக துப்புரவு தொழிலாளர்களாக பணியாற்றுவோர் கூறுகையில், ‘‘நாங்கள் படிக்கவில்லை, எங்களுக்கு அரசு வேலை கிடைக்கும் என தான் இங்கு வந்தோம் ஆனால் எங்களுக்கு போட்டியாக படித்தவர்கள் வந்துவிட்டார்கள். மாநகராட்சி அதிகாரிகள் எங்களுக்கு தான் முன்னுரிமை தரவேண்டும்,’’ என்றனர்.

Tags : masters graduates ,
× RELATED முதுநிலை பட்டதாரிகளுக்கான தகுதிப்பட்டியல் வெளியீடு