×

மருத்துவ ஆய்வகங்களை பதிவு செய்யவேண்டும்

நாமக்கல், நவ.27: நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும், மருத்துவ நிறுவனங்கள், ஆய்வகங்களை பதிவு செய்யவேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இச்சட்டத்தின் கீழ் ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், யுனானி மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யோகா இயற்கை வாழ்வியல் மருத்துவ முறைகளில் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை, சிகிச்சை வழங்கும் அரசு மற்றும் தனியாரால் நிர்வகிக்கப்படும் மருத்துவ நிறுவனங்களும், மருத்துவ ஆய்வுக் கூடங்களும், ரேடியாலஜி மையங்களும் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. மத்திய அரசின் ஆயுதப்படையால் நடத்தப்படும் மருத்துவ நிறுவனங்களுக்கு மட்டும் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இயங்கும் மருத்துவ நிறுவனங்கள், மருத்துவ ஆய்வுக்கூடங்கள், ரேடியாலஜி மையங்கள் இணைய தளம் மூலமாக மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனருக்கு வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பதிவுச்சான்று கோரி விண்ணப்பிக்காதபட்சத்தில், மருத்துவ நிறுவனங்கள், மருத்துவ ஆய்வுக்கூடங்கள் மற்றும் ரேடியாலஜி மையங்கள் சட்ட விரோதமாக செயல்படுவதாகக்கருதி தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : laboratories ,
× RELATED புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 332 ஆய்வக...