×

கோவிந்தபுத்தூரில் பேருந்து நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள், மாணவர்கள் அவதி

தா.பழூர், நவ. 27: கோவிந்தபுத்தூரில பேருந்து நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள், மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் கோவிந்தபுத்தூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்காக அரியலூர் மற்றும் தா.பழூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டிய சூழலுக்கு பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கிராமத்தில் 2 இடங்களில் பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கிறது. ஆனால் இந்த பகுதியில் பயணிகள் நிழற்குடை இல்லை.

தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டிருக்கிற சூழ்நிலையில் கோவிந்தபுத்தூரில் மட்டும் நிழற்குடை அமைக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள், மழை, வெயில் உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் பேருந்துக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. மழை மற்றும் வெயிலுக்காக மரத்தடி நிழல் அல்லது அருகில் உள்ள வீடுகளில் நிற்கும்போது பயணிகள் இல்லையென டிரைவர்கள் பேருந்துகளை நிறுத்தாமல் சென்று விடுகின்றனர். மேலும் காலை வேளையில் மாணவ மாணவிகள் பேருந்துக்காக மழையிலும், வெயிலிலும் நிற்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே நீண்டகால கோரிக்கையான கோவிந்தபுத்தூரில் பேருந்து நிழற்குடை அமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : public ,Govindputhur ,bus shelters ,
× RELATED தமிழ்நாட்டில் தொடர் மழை பெய்து...