×

ஸ்ரீபெரும்புதூரில் மூடப்பட்டுள்ள நோக்கியா நிறுவனத்தில் செல்போன் சார்ஜர் உற்பத்தி: பின்லாந்து நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் மூடப்பட்டுள்ள நோக்கியா நிறுவனத்தின் உட்கட்டமைப்பு  வசதிகளை பயன்படுத்தி, பின்லாந்து நாட்டை சேர்ந்த நிறுவனம் செல்போன் சார்ஜர் உற்பத்தி செய்ய தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்  செய்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஜனவரி 2006ம் ஆண்டில் ஸ்ரீபெரும்புதூரில் உற்பத்தியை தொடங்கிய நோக்கியா நிறுவனம், உலகத்தின் மிகப்பெரிய செல்போன் தயாரிக்கும் நிறுவனமாகவும், செல்போன் ஏற்றுமதி மையமாகவும் திகழ்ந்தது.  

தொழில் சம்பந்தப்பட்ட சில சிக்கல்கள் காரணமாக, நோக்கியா நிறுவனம் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் 2019ம் ஆண்டு நடந்த 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, நோக்கியா டெலிகாம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரூ.500 கோடி முதலீட்டில் 5,600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், செல்போன் சார்ஜர் உற்பத்தி செய்யும் விரிவாக்க திட்டத்தினை செயல்படுத்த, பின்லாந்து நாட்டை சேர்ந்த சல்கேம் மேனுபேக்சரிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது.

அதுமட்டுமல்லாது, எப்ஐஎச் இந்தியா டெவலப்பர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மின்னணு சாதனங்கள் உற்பத்திக்கான விரிவாக்க திட்டத்திற்காக, 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2500 கோடி முதலீடு செய்யவும், 20,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தற்போது, சல்கேம் நிறுவனமானது ஸ்ரீபெரும்புதூரில் மூடப்பட்டுள்ள நோக்கியா நிறுவனத்தின் தொழிற்சாலையை வாங்குவதற்காக, நோக்கியா நிறுவனத்துடன் ஓர் உடன்பாட்டை எட்டியுள்ளது.

நோக்கியா நிறுவனத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி, சல்கேம் நிறுவனம், அடுத்த ஆண்டு மார்ச் முதல் மின்னணு சாதனங்கள் உற்பத்தியை தொடங்கும் என்றும், இந்த தொழிற்சாலை முழுமையான செயல்பாட்டினை அடையும்போது, ஏற்கனவே பணிபுரிந்து வரும் 7,000 பேர்களுடன் கூடுதலாக 10,000 பேருக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும். இந்நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 1,300 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Cell phone charger manufacturer ,company ,Sriperumbudur ,Nokia ,Finland ,Tamil Nadu ,
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...