×

திருக்கனூர் அருகே பரபரப்பு கழிவுநீர் அகற்றும் பணி தடுத்து நிறுத்தம்

திருக்கனூர், நவ. 27:  திருக்கனூர் அருகே கழிவு நீர் அகற்றும் பணி தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் செம்பகுளம் உள்ளது. கழிவுநீர் மற்றும் மழைநீரால் இந்த குளம் நிரம்பி சுடுகாட்டுக்கு செல்லும் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால், குளத்தில் உள்ள நீரை வெளியேற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் நேற்று முன்தினம் டி.பி.ஆர்.செல்வம் எம்எல்ஏ தலைமையில் திருக்கனூர்- விழுப்புரம் மெயின்ரோடு, கே.ஆர்.பாளையம் செக்போஸ்ட்டில் சாலை மறியல் செய்தனர்.தகவல் அறிந்த கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார், உதவி பொறியாளர் நாகராஜன், பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் லூயிபிரகாசம் ஆகியோர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குளத்தில் உள்ள நீரை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பொதுமக்களிடம் பேசுகையில், வாய்க்காலில் கழிவு நீரை விடக்கூடாது என பொதுப்பணித்துறை கடிதம் எழுதி உள்ளது. அதனால் தான் குளத்து நீரை வெளியேற்ற முடியவில்லை என பொதுப்பணித்துறை எழுதிய கடிதத்தை காட்டினார்.இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அங்கிருந்த பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து டி.பி.ஆர்.செல்வம் எம்எல்ஏ பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசி கழிவுநீரை வாய்க்காலில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து பொதுப்பணித்துறை ஒப்புதலின் பேரில், வாய்க்கால் மூலம் குளத்தில் உள்ள கழிவுநீரை வெளியேற்றுவதற்கான பணியை கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் துவங்கினர்.இதையறிந்த செட்டிப்பட்டு மற்றும் வாய்க்கால் பகுதி மக்கள் அங்கு வந்து பணிகளை தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்த திருக்கனூர் சப்- இன்ஸ்பெக்டர் குமார், கொம்யூன் பஞ்சாயத்து இளைநிலை பொறியாளர் சாந்தன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Tirukkanur ,
× RELATED திருக்கனூரில் விஷகுளவி கூடு அழிப்பு