×

அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட இணைப்புச்சாலை திட்டம் நிறைவேறுமா?: பழநி பக்தர்கள் எதிர்பார்ப்பு

பழநி:  அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட பழநி சுற்றுலா பஸ் நிலைய இணைப்புச் சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்காக கிழக்கு கிரிவீதி பகுதியில் சுற்றுலா பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மலைக்கோயிலுக்கு அருகில் உள்ள சுற்றுலா பஸ் நிலையத்திற்கு பழநியாண்டவர் கல்லூரி இட்டேரி சாலை மற்றும் இடும்பன் இட்டேரி சாலை வழியாக வாகனங்கள் வர முடியும்.    விழாக்காலங்களில் பக்தர்கள் பாதயாத்திரையாக வரும் வழித்தடம் என்பதால் இச்சாலையில் வாகனங்கள் செல்வதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலையில் இருந்து சுற்றுலா பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதிக்கு இணைப்புச் சாலை அமைத்தால் வாகனங்கள் சிரமமின்றி வருவதற்கு ஏதுவாக இருக்குமென கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தியும் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பெரிய அளவில் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.    எனவே, புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு இணைப்புச் சாலை திட்டத்தை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமாரிடம் கேட்டபோது, ‘‘இணைப்புச்சாலை திட்டம் தொடர்பாக சட்டமன்றத்தில் பலமுறை வலியுறுத்தப்பட்டது. எனினும் உரிய பலனில்லை. தற்போது அறநிலையத்துறை அமைச்சரிடம் இத்திட்டத்தின் நன்மை தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட தொடர்புடைய துறை அமைச்சர்களிடம் ஆலோசித்து திட்டத்தை விரைந்து நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். விவசாயிகள் உட்பட யாருக்கும் பாதிப்பு ஏற்படாவண்ணம் இத்திட்டம் நிறைவேற்றப்படும்’’ என்றார்….

The post அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட இணைப்புச்சாலை திட்டம் நிறைவேறுமா?: பழநி பக்தர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Bharani ,PALANI ,Dinakaran ,
× RELATED பழநி வடகவுஞ்சியில் பாதை வசதி ஏற்படுத்தி தர கோரி மனு