×

காட்டுமன்னார்கோவில் அருகே பராமரிப்பின்றி இயங்கும் வாரச்சந்தை

காட்டுமன்னார்கோவில், நவ. 26: காட்டுமன்னார்கோவில் அருகே பராமரிப்பின்றி வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. மழை நீர் தேங்கியுள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிவாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காட்டுமன்னார்கோவில்  அடுத்த கொளக்குடி ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாரச்சந்தை  நடைபெற்று வருகிறது. சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள  தாழ்வான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கீற்று கொட்டகையில் வாரந்தோறும்  சனிக்கிழமை காலை 10 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை செயல்படும் இந்த  காய்கனி சந்தையில் அனைத்து வகையான காய் கனிகள், விதைகள், வாழை, கிழங்கு  பயிர் மற்றும் பழமர செடிகள், மளிகை பொருட்கள், குடிசை தொழிலில்  தயாரிக்கப்படும் சிற்றுண்டிகள் ஆகியவை மலிவு விலையில் விற்பனை  செய்யப்படும். நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமப்புற  பொதுமக்களுக்கு பெரும் பயன்பாடாக இருந்து வருகிறது. இதனை பராமரிக்க  வருடந்தோறும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தனியாருக்கு ஏலம் விடப்படும்.  அதன்படி இந்த வருடம் ரூ.3.75 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. ஏலம்  எடுத்தவர் சார்பாக வியாபாரிகளிடம் வாராவாரம் பராமரிப்புக்காக ரூ.50 முதல்  ரூ.200 வரை வசூலிப்பர்.

இந்த வாரச்சந்தையில், காட்டுமன்னார்கோவில்  பகுதிகளான உருத்திரசோலை, திருச்சின்னபுரம், அறந்தாங்கி, புடையூர்,  கொண்டசமுத்திரம் மற்றும் அரியலூர் மாவட்ட எல்லைகளான பாப்பாக்குடி,  வானமாதேவி, காடுவெட்டி, படைநிலை ஆகிய பகுதிகளில் விளையும் காய்கனிகள்  மற்றும் வாழை, சோளம் ஆகியவைகள் விவசாயிகளால் நேரடியாகவும் மற்றும் இடை  தரகர்கள் மூலமாகவும் கொண்டு வந்து விற்பனை செய்வர். மேலும், இதர பிற  மாவட்டங்களில் இருந்தும் மேற்கண்ட பொருட்கள் விற்பனைக்காக கொண்டு  வரப்படும். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் வாரத்தில் இருமுறை  சிறப்பு சந்தை கூடும். தற்போது மழைக்காலம் என்பதால் சாலையில் இருந்து  சுமார் 4 அடிகள் தாழ்வாக உள்ள இச்சந்தையில் தண்ணீர் தேங்கி  வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் தொற்று நோய்  ஏற்படும் நிலை உள்ளது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதுடன்  சந்தையில் விற்கப்படும் உணவு பொருட்களில் அசுத்த நீர் கலந்து விடுகின்றன.  இதுகுறித்து  காய்கனி வியாபாரிகளிடம் கேட்டபோது, சாலையோரத்தில் சந்தை இருப்பதால்  சனிக்கிழமை அப்பகுதி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விபத்துகள்  ஏற்படுகின்றன. 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மட்டுமின்றி  பொதுமக்களுக்கும் லாபகரமாக இருக்கும் சந்தை தற்போது போதிய பராமரிப்பு இன்றி  சுகாதார சீர்கேடாக உள்ளது. மேலும் இது நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம்  என கூறப்படுகின்றது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து  செல்வதற்கு வசதியாக மாற்று இடத்தில் சந்தையின் அளவை அதிகப்படுத்தி  சிமெண்ட் கலவையினால் ஆன மேடான தரைத்தளமும், குடிசைகளுக்கு மாற்றாக  கான்கிரீட் கூரைகளையும் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.  இதனால் வியாபாரிகளிடமிருந்து முறைகேடாக வசூலிக்கப்படும் அதிகப்படியான பணம்  வியாபாரிகளுக்கு மீதமாவதால் பொருட்களின் விலையும் கணிசமாக குறையும்.  அத்துடன் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கவும் இது வழிவகை செய்யும் என  தெரிவித்தனர்.


Tags : Katumannarko ,
× RELATED காட்டுமன்னார்கோவில் இசேவை மையத்தில்...