×

பொதுப்பணி வவுச்சர் ஊழியர்கள் தொடர் பட்டினி போராட்டம்

புதுச்சேரி, நவ. 26: புதுவை சுதேசி மில் எதிரே பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து தொடர் பட்டினி போராட்டத்தை தொடங்கி உள்ளனர். புதுவை அரசின் பொதுப்பணித்துறையில் கடந்த 2010ம் ஆண்டு 1311 வவுச்சர் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர். 9 ஆண்டுகளாக பணியாற்றும் அவர்கள் தங்களை தினக்கூலிகளாக மாற்ற வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கடந்தாண்டு கோப்பு தயாரிக்கப்பட்டு செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை கண்டித்தும், பணியாணை உறுதி செய்யும் வரை தொடர் வேலை நிறுத்த பட்டினி போராட்டம் நடத்தக்கோரியும் அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு சார்பில் தொடர் வேலை நிறுத்த பட்டினி போராட்டம் நேற்று தொடங்கியது.சுதேசி மில் எதிரே நடைபெற்ற இப்போராட்டத்துக்கு சங்கத் தலைவர் சரவணன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். தலைமை பேச்சாளர் வெங்கடேசன், காரைக்கால் செயலர் பிரபு ஆகியோர் வாழ்த்தி பேசினர். செயற்குழு உறுப்பினர் வள்ளி சிறப்புரையாற்றினார்.

 இதில் புதுச்சேரி மட்டுமின்றி காரைக்கால், ஏனாமில் இருந்தும் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதன் காரணமாக பொதுப்பணித்துறையின் குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வவுச்சர் ஊழியர்களால் நடைபெறும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களிடம் கேட்டபோது, வவுச்சர் ஊழியர்களான தங்களை சீனியாரிட்டி முறையில் பணிநிரந்தரம் செய்வதோடு 30 நாள் வேலைநாளாக உயர்த்த வேண்டும், சட்டக்கூலி நாள் ஒன்றுக்கு ரூ.648 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், 10 மாத நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்றனர்.

Tags : Public Works Voucher ,Hunger Struggle ,
× RELATED பொதுப்பணி வவுச்சர் ஊழியர்கள் 3வது நாளாக போராட்டம்