திருக்கனூர், நவ. 25: மத்திய, மாநில அரசுகளின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் குடிநீர் வழங்கும் நோக்கத்தோடு அனைத்து பகுதிகளில் உள்ள குடிநீர் இணைப்புகளை கணக்கெடுப்பு நடத்திட புதுச்சேரி உள்ளாட்சித்துறை அறிவுறுத்தியுள்ளது.அதன்படி மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து பகுதிக்கு உட்பட்ட அனைத்து குடிநீர் வழங்கல் ஊழியர்களுக்கு கொம்யூன் ஆணையர் ஜெயக்குமார் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. பகுதி வாரியாக வீடுதோறும் சென்று முறையான இணைப்பு பெறப்பட்டதா அல்லது முறையற்ற முறையில் இணைப்பு எடுக்கப்பட்டுள்ளதா அல்லது தனியாக குழாய் கிணறு அமைத்து குடிநீர் எடுக்கப்படுகிறதா என்ற விவரங்களை கணக்கெடுப்பு செய்வதோடு ஆதார் எண், தொலைபேசி எண் போன்ற விவரங்களையும் சேகரித்து அளித்திட அறிவுறுத்தப்பட்டது. இந்த விவரங்களை கணினி மயமாக்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட குடிநீர் வழங்கல் ஊழியர்களுக்கும், மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட குடிநீர் வழங்கல் ஊழியர்களுக்கும் இதுகுறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இறுதியில் கணக்கெடுப்பு செய்வதற்கான பதிவேடுகளையும் வழங்கி நீர் சிக்கனம், குறித்த நேரத்தில் நீர் வழங்குதல், மோட்டார் பம்ப்செட் பராமரிப்பு போன்றவற்றுக்கான அறிவுரை வழங்கப்பட்டது. இதில் உதவி பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர்கள் பாஸ்கரன், சாந்தன் மற்றும் அனைத்து நிலை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.