×

பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு புதிய உத்திகளை கையாள வேண்டும்

தர்மபுரி, நவ.26:  விளைபொருட்களை உற்பத்தி செய்வதுடன், சந்தைப்படுத்துவதற்கு புதிய உத்திகளை கையாள வேண்டும் என கலெக்டர் பேசினார்.
தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட தொழில் மையம் சார்பில், மாவட்ட தொழில் மையத்தினால் செயல்படுத்தப்படும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில், கலெக்டர் மலர்விழி தலைமை வகித்து பேசியதாவது:
 தமிழக அரசு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சிறு, குறு தொழில் தொடங்க, எண்ணற்ற கடனுதவிகளை வழங்குகிறது. ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதால், அதற்கு மாற்றான பொருட்களை தர்மபுரி மாவட்டத்திலுள்ள மகளிர் குழுக்கள் உற்பத்தி செய்து கோவை, சென்னை உள்ளிட்ட இதர இடங்களில் விற்பனை செய்கிறது.

பொருட்களை உற்பத்தி செய்வதுடன், சந்தைப்படுத்துவதற்கு புதிய உத்திகளை கையாள வேண்டும். சந்தையில் தற்போது உள்ள பொருட்களை, புதுமைப்படுத்தி உற்பத்தி செய்ய வேண்டும். தொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள், என்ன தொழில் என்பதை உறுதி செய்துகொண்டு, தொடங்க வேண்டும். பின்னர் தரச்சான்றிதழ்கள் பெற்று சந்தைப்படுத்த வேண்டும். முதலீட்டிற்குத் தேவையான அனைத்து பொருளாதார வசதிகளையும் அரசு வங்கிகள் வாயிலாக செய்து வருகிறது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.

பின்னர், நீட்ஸ் மற்றும் யூஓய்இஜி திட்ட பயனாளிகள் 42 பேருக்கு ₹5.55 கோடி மதிப்பில் வங்கிக்கடன் ஆணைகளை, கலெக்டர் வழங்கினார். மேலும், மாவட்ட தொழில் மையத்தால் நடைமுறைப்படுத்தப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குரிய கடன் திட்டங்கள், மானிய திட்டங்கள் மற்றும் ஐஎஸ்ஒ22000 போன்ற தரக்கட்டுப்பாடு சான்றிதழ்கள் பெறுதல் மற்றும் அதற்காக செலுத்தப்பட்ட தொகையினை, அரசு மானியமாக திரும்பபெறுதல் தொடர்பான விளக்கவுரை மற்றும் வழிகாட்டுதல் அளிக்கப்பட்டது.

மாவட்ட சிறுதொழில் அதிபர்கள் சங்கம், அனைத்து துறை உற்பத்தியாளர்கள் சங்கம், சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் போன்ற அமைப்புகள், தொழில் நிறுவன அதிபர்கள், நிறுவன ஊழியர்கள் மற்றும் இறுதியாண்டு கல்லுலூரி மாணவர்கள் ஆகியோரிடையே குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கான வழிமுறைகள், பல்வேறு கடன் திட்டங்கள் மற்றும் தரக்கட்டுப்பாடு சான்றிதழ் பெறும் வழிமுறைகள் அதற்கான கட்டணத்தை, அரசு மானியமாக திரும்ப பெறுதல் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முன்னதாக மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அசோகன் வரவேற்றார். முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன் மற்றும் கனரா வங்கி மேலாளர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா