×

ஐஆர்டிடி மருத்துவமனை ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தல்

ஈரோடு, நவ. 26:  இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட நிர்வாகிகள் பொன்.பாரதி, சுந்தரராஜன் ஆகியோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 80 வகையான தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவமனைகள், பேக்கரிகள், துணிநூல் பதனிடும் பாலிசி மற்றும் செங்கல் தயாரிப்பு, சினிமா திரையரங்குகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு விடுதிகள், பனியன், லாட்டரி, விசைத்தறி, எண்ணெய் ஆலைகள், நூற்பாலைகள், தையல் ஆயத்த ஆடைகள், பொதுப் போக்குவரத்து மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் ஆகியவை முக்கியமானதாக உள்ளது. இத்தொழிலில் மாவட்டம் முழுவதும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மாவட்டத்தில் எந்த ஒரு தொழிலும் குறைந்தபட்ச ஊதிய அரசாணை படி தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. இதனால், ஊதிய அமலாக்கம் என்பது ஈரோடு மாவட்டத்தில் கேள்விக்குறியாக உள்ளது.மாநில அரசின் நிறுவனமான பெருந்துறை ஐஆர்டிடி மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் சுமார் 350 பேரின் ஊதிய நிலை கேள்விக்குறியாக உள்ளது. செவிலியர்கள், உதவி செவிலியர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என்ற பிரிவுகளில் நிரந்தரம் செய்யப்படாமல் 5 முதல் 12 ஆண்டுகள் பணியாற்றி வருகின்றனர்.இவர்களுக்கு ரூ.100 முதல் ரூ.300 மட்டுமே ஊதியமாக கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இவர்களுக்கு அரசாணைப்படி ரூ.465 வீதம் தினமும் வழங்க வேண்டும். இதை மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Tags : hospital staff ,
× RELATED படுக்கையிலிருந்து கீழே விழுந்து...