×

அவிநாசி-அத்திக்கடவு திட்டத்திற்காக விளைநிலங்களில் குழாய் பதிக்க எதிர்ப்பு

ஈரோடு, நவ.26: அவிநாசி-அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்திற்காக விளைநிலங்களில் குழாய்கள் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அவிநாசி-அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பவானி காலிங்கராயன்பாளையம் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்களை நிரப்பும் வகையில் இத்திட்டம் செயல்படத்தப்பட உள்ளது.இதற்காக, குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், சித்தோடு அடுத்துள்ள நல்லக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் விவசாய விளைநிலங்கள் வழியாக குழாய்கள் பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.விளைநிலத்தில் குழாய் பதிக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு சாலையோரங்களில் குழாய்கள் பதித்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

பின்னர், அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:அவிநாசி-அத்திக்கடவு திட்டத்திற்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட உள்ளது. இதற்காக, ஐஆர்டிடி பொறியியல் கல்லூரி பின்புறம் நல்லக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் விவசாய விளைநிலங்களை கையகப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவ்வாறு விளைநிலத்தில் குழாய் பதித்தால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.  சாலையோரங்களில் குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இதற்கு தேவையான இடம் உள்ள நிலையில் விவசாய விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்ல அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். ஏற்கனவே, சாலை விரிவாக்கத்திற்கு நிலம் வழங்கி உள்ள நிலையில் தற்போது இத்திட்டத்திற்காக நிலத்தை கையகப்படுத்தினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, இத்திட்டத்தில் மாற்றம் செய்து நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags : farmland ,Avinashi ,
× RELATED கழிவுகளை கொட்ட வந்த லாரி சிறைபிடிப்பு