×

பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நுழைவுச்சீட்டு வழங்குபவர்கள் தாமதமாக வந்ததால் நோயாளிகள் கடும் அவதி

கும்பகோணம், நவ. 26: பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நுழைவுச்சீட்டு வழங்குபவர்கள் தாமதமாக வருவதால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரத்தில் முதன்மை ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதன்கீழ் சோழபுரம், கொத்தங்குடி, சுவாமிமலை, சுந்தரபெருமாள் கோயில் உள்ளிட்ட 4 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த முதன்மை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பட்டீஸ்வரம், சோழன்மாளிகை, ஆரியப்படையூர், ஆவூர், தேனாம்படுகை, நாதன்கோயில், பம்பப்படையூர், உடையாளூர், சுந்தரபெருமாள்கோயில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து 50 கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனா்.இங்கு ஒரு வட்டார மருத்துவ அலுவலர், 4 மருத்துவர்கள், செவிலியர்கள், நுழைவுசீட்டு வழங்குபவர்கள், ஆய்வு பணியாளர்கள் பணியில் இருந்து வருகின்றனர். மேலும் நடமாடும் மருத்துவ குழுவினர், பள்ளி மாணவர்களை கண்காணிக்கும் மருத்துவ குழுவினரும் இருந்து வருகின்றனர்.

தற்போது மழைக்காலம் துவங்கிய நிலையில் இரவில் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. மேலும் சில நாட்களாக மதிய நேரத்துக்கு மேல் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், விவசாய தொழிலாளர்கள் என ஏராளமானோருக்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் சிகிச்சை பெறுவதற்காக பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தினம்தோறும் ஏராளமானோர் வருகின்றனர். ஆனால் மருத்துவர்கள் வந்தும் நுழைவு சீட்டு வழங்குபவர்கள் அடிக்கடி தாமதமாக வருவதால் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் வரிசையில் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.நேற்று காலை 9 மணிக்கு வர வேண்டிய நுழைவு சீட்டு வழங்குபவர்கள் 9.45 மணி வரை வராததால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து அங்குள்ள பணியாளர் ஒருவரிடம் நோயாளிகள் கேட்டால், விரைவில் வந்து சீட்டு வழங்குவார், அதுவரை வரிசையில் நில்லுங்கள் என பதில் கூறுகிறார். பின்னர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கூச்சலிடவே சிறிது நேரத்தில் நுழைவு சீட்டு தருபவர்கள் வந்து சீட்டுகளை வழங்கினார்.அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பெரும்பாலும் ஏழை மக்கள் தான் வருகின்றனர். அதனால் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டுமென சுகாதாரத்துறையும் பல்வேறு நவீன வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. ஆனால் பொதுமக்களின் கஷ்டத்தை உணராமல் அலட்சியப்படுத்தும் வகையில் நுழைவு சீட்டு தருபவர்கள் தாமதமாக வருவது வேதனையான விஷயமாகும். எனவே பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குறித்த நேரத்துக்கு அனைத்து பணியாளர்களும் வருகிறார்களா என்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : issuance ,Patiaswaram Primary Health Center ,
× RELATED பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில்...