×

உள்ளாட்சித் தேர்தலுக்காக நடவடிக்கை 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பணியாளர்கள் லிஸ்ட் கேட்கிறது மாவட்ட நிர்வாகம்

தேனி, நவ. 20:உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஊரக வளர்ச்சித் துறையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் பணியாளர்கள் குறித்து அறிக்கையை மாவட்ட நிர்வாகம் கேட்டுள்ளது. தேனி மாவட்டத்தில், எட்டு ஊராட்சி ஒன்றியங்களின் அலுவலகங்கள், 130 ஊராட்சி அலுவலகங்கள், 22 பேரூராட்சிகள், 6 நகராட்சிகள் உள்ளன. உள்ளாட்சித் தேர்தல் தேதியை வருகிற டிசம்பர் 12ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் மாவட்ட நிர்வாகம் முடுக்கி விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் முதல் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வரையிலான பணியிடங்களுக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. இதில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் சிலர் இடமாறுதல் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளநிலையில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் பணியாளர்களை வேறு பகுதிக்கு மாறுதல் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கும் மாவட்ட நிர்வாகம் அறிக்கை கேட்டுள்ளது. இதில் தங்கள் ஒன்றியத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் இளநிலை உதவியாளர் முதல் வட்டாரவளர்ச்சி அலுவலர் வரையாரும் இல்லை என்ற உறுதிச்சான்று கேட்டுள்ளது. இத்தகைய உறுதிச்சான்று தயாரிக்கும் பணியில் தற்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags : elections ,District Administration ,
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு