×

பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் பட்டியல் தெரிவிக்க சிறப்பு கிராம சபா கூட்டம்

திருவண்ணாமலை, நவ.13: திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள தகுதியான பயனாளிகள் பட்டியல் தெரிவிப்பது குறித்த சிறப்பு கிராம சபா கூட்டம் நேற்று அனைத்து ஊராட்சிகளிலும் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளிலும் பிரதம மந்திர வீடு வழங்கும் திட்டம் குறித்து  விழிப்புணர்வு, பயனாளிகள் தேர்வு செய்வது மற்றும் தேர்வு செய்யப்பட்டுள்ள தகுதியான பயனாளிகள் பட்டியல் தெரிவித்தல் குறித்து சிறப்பு கிராம சபா கூட்டம் (நேற்று)  அனைத்து ஊராட்சிகளிலும் நடத்த வேண்டும் என கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது. திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபா கூட்டத்திற்கு துணை பிடிஓ வடிவேல் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் தகுதியான 51 பயனாளிகளின் பெயர்களை துணை பிடிஓ வாசித்தார். மேலும், இத்திட்டத்தின் கீழ் வீடு கேட்டு பயனாளிகள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும், தேர்வு செய்யப்பட்ட தகுதியான பயனாளிகளின் பெயர் பட்டியல் ஊராட்சி அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேபோல், கலசபாக்கம் ஒன்றியத்தில் கலசபாக்கம், பூண்டி, பழங்கோவில், சிறுவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற கிராம சபா கூட்டங்களில் பிடிஓ அன்பழகன் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் உள்ள பெயர்களின் விபரங்களை படித்தார். மேலும், பொதுமக்கள் பார்வைக்காக ஊராட்சி மன்ற அலுவலகங்களில் பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது. பல்வேறு கிராமங்களில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கேட்டு பயனாளிகள் மனுக்களை அளித்தனர்.

Tags : meeting ,Special Grama Sabha ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...