×

புல்புல் புயல் தாக்கம் எதிரொலி அதிகளவு பனிமூட்டத்தால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

கடலூர், நவ. 8: வங்கக்கடலில் உருவாகியுள்ள புல்புல் புயல் தாக்கம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் வானிலை மையம் எச்சரிக்கையை தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் அதிகளவு பனிமூட்டம் நீடிப்பதால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். வடக்கு அந்தமான் பகுதியில் நிலவிய ஆழ்ந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு பாகிஸ்தான் பரிந்துரைத்த புல்புல் என்ற பெயர் இடப்பட்டுள்ளது. இந்த புயல் அதி தீவிர புயலாகும். ஆனால் வழக்கமான வானிலை காரணமாக இப்புயலும் வலுவிழக்க கூடும். 11, 12 தேதிகளில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரை இதன் இலக்காக கொண்டு கரை கடக்க கூடும். எனவே இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழை இருக்காது. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசான மழை இருக்கலாம். சென்னை மற்றும் வட தமிழகத்தில் கடும் பனி மூட்டத்துடன், வறண்ட வானிலை இருக்கும். கடலூர், விழுப்புரம் மாவட்டத்திலும் இதே நிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே கடலூர் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 2 ஏற்றப்பட்டுள்ளது. மேலும் புயல் சின்னம் காரணமாக கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து கடலூர் துறைமுகம் மற்றும் கடலோர கிராமங்களில் இருந்து கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஒருசில கிராமங்களிலிருந்து மட்டும் கரையோர பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அரபிக்கடலில் உருவாகியுள்ள மகா புயல் மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள புல்புல் புயல் என இரு புயல் தாக்கம் காரணமாக கடலூர் மாவட்டம் மற்றும் தமிழக பகுதியில் பனிமூட்டம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அதிகாலை பொழுதில் பனிமூட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் வாகனங்கள் காலை 8 மணி வரை முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கின்றன. அதிகளவு பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.

Tags : Fishermen ,sea ,Bulbul Storm ,
× RELATED கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துக்கான...