×

பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்


தர்மபுரி, நவ.8: இண்டூர் அருகே அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர், விளையாட்டு மைதானம் அமைக்கவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நல்லம்பள்ளி தாலுகா, இண்டூர் அருகே கூலிக்காரன்கொட்டாயில் இயங்கி வந்த அரசு நடுநிலைப்பள்ளி, கடந்த 2018ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதில் கும்பளஅள்ளி, நடப்பனஅள்ளி, கவுண்டன்கொட்டாய் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 115 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி கடந்த 2012ம் ஆண்டு முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. ஆனால், தரம் உயரத்தப்பட்டும் இப்பள்ளிக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தில் அத்துமீறி நுழையும் சமூக விரோதிகள், தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இப்பள்ளிக்கு விளையாட்டு மைதானமும் இல்லை. எனவே, பள்ளிக்கு சொந்தமான இடத்தை சமன்செய்து, விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். மேலும், சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், ‘இப்பள்ளியில் உள்ள பழுதடைந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும். மாணவர்கள் தரைமட்ட தண்ணீர் தொட்டியில், பக்கெட்டில் கயிறு கட்டி தண்ணீர் எடுத்து பயன்படுத்துகின்றனர். இதனால் அசம்பாவிதம் நிகழ்வதை தடுக்க, குடிநீர் குழாய் அமைத்து தரவேண்டும். பள்ளியில் சைக்கிள் நிறுத்த ஸ்டாண்ட், சத்துணவு கூடம், சுற்றுச்சுவர் ஆகியவற்றை உடனடியாக கட்டித்தரவேண்டும். மேலும், காலியாக உள்ள இளநிலை பணியாளர் இடத்தை நிரப்ப கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா