×

டிராவல்ஸ் அதிபர் சாவில் திடீர் திருப்பம்

புதுச்சேரி, நவ. 7:  புதுச்சேரியில்  காரில் ஏசி வெடித்து டிராவல்ஸ் அதிபர் பலியானதாக கூறப்பட்ட நிலையில்,  திடீர் திருப்பமாக, அவர் காதல் பிரச்னையால் காரினுள் பெட்ரோல் ஊற்றி  தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
புதுச்சேரி  முதலியார்பேட்டை உழந்தைகீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது  மனைவி நாகம்மாள். இவர்களுக்கு 2 மகன், 4 மகள்கள். கடைசி மகன்  முத்துக்குமரன் (32) தவிர அனைவருக்கும் திருமணமாகி விட்டது.  முத்துக்குமரனுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்தது. அவர், சொந்தமாக  கார் வாங்கி. வாடகைக்கு ஓட்டி வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம்  காலை சவாரிக்கு செல்வதற்காக காரில் ஏறி அமர்ந்தார். கார் கண்ணாடிகளை ஏற்றி  விட்டு, சீட் பெல்ட் அணிந்து கொண்டு காரை ஸ்டார்ட் செய்தார். அப்போது  திடீரென கரும்புகை எழுந்தது. பயங்கர சத்தத்துடன் கார் வெடித்து  தீப்பிடித்து எரிந்த நிலையில் முத்துக்குமரன் தீயில் சிக்கி உயிருக்கு  போராடினார். அக்கம் பக்கத்தினர் கார் கதவை உடைத்து திறந்தனர்.  முத்துக்குமரன் சீட்பெல்ட் அணிந்த நிலையில் உடல்கருகி பலியானது  தெரியவந்தது.தகவலறிந்த முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்  தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்களும் சம்பவ  இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். பின்னர், முத்துக்குமரன் உடலை போலீசார்  மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். கார் ஏசி கேஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதில் சிக்கி  முத்துக்குமரன் பலியாகி இருக்கலாம் எனவும் முதலில் கூறப்பட்டது.
இது  குறித்து போலீசார் சந்தேக மரணம் (174) பிரிவில் வழக்குப்பதிந்து விசாரணை  நடத்தினர். காரில் தீ விபத்து ஏற்பட்டதால் எப்படி தப்பிக்கலாம் என  டிராவல்ஸ் நடத்தி வரும் முத்துக்குமரனுக்கு நன்கு தெரியும். ஆனால்  தப்புவதற்கான முயற்சியை அவர் எடுக்காமல் இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை  எழுப்பியது. மேலும், காரினுள் 2 பெட்ரோல் பாட்டில்கள் இருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒன்றில் பெட்ரோல் முழுவதுமாக இருந்தது,  மற்றொன்று காலியாக இருந்தது.

தொடர் விசாரணையில், முத்துக்குமரன்  காதல் பிரச்னையால் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.  முத்துக்குமரன் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், பின்னர் அந்த பெண்ணுடன்  திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதாகவும், ஆனால் திடீரென திருமணத்தில் தடை  ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட விரக்தியில் முத்துக்குமரன்  தற்கொலை செய்து கொண்டதாகவும், தற்கொலை செய்வதற்கு முன், தனது செல்போனில்  வாட்ஸ்அப்பில் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன், இது தான் எனது கடைசி பதிவு  என அவர் பதிவிட்டு இருப்பதாகவும் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்  தெரிவித்தார். இதற்கிடையே, பிரேத பரிசோதனை முடிவிலும் தற்கொலை செய்து  கொண்டது தெரிய வந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.



Tags : Travel Agent ,Chanel ,
× RELATED டிராவல்ஸ் அதிபர் கொலையில் முக்கிய குற்றவாளி உள்பட 5 பேர் கைது