×

பு.முட்லூர்-சி.முட்லூர் இடையே வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்

சிதம்பரம், நவ. 7: பு.முட்லூர்-சி.முட்லூர் இடையே வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வெள்ளாற்றில் உப்பு நீர் உட்புகாமல் இருக்க தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர். பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக புவனகிரி ஆதிவராகநல்லூர் கிராமம் அருகே வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆதிவராகநல்லூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் கிழக்கே பு.முட்லூர்-சி.முட்லூர்  இடையே அமைந்துள்ள சிதம்பரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகே வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என சி.முட்லூர் பகுதி மக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். இது குறித்து திமுக புவனகிரி ஒன்றிய செயலாளர் மனோகரன் கூறுகையில், புவனகிரியை அடுத்துள்ள ஆதிவராகநல்லூர் அருகே தடுப்பணை அமைப்பதை விட பு.முட்லூர்-சி.முட்லூர் இடையே வெள்ளாற்றில் தடுப்பணை கட்டுவதே சிறந்தது. இங்கு தடுப்பணை கட்டினால் மஞ்சக்குழி, தம்பிக்குநல்லான்பட்டினம், கொட்டாபுளிசாவடி, திருவள்ளுவர் நகர், ஆதிவராகநல்லூர், கீழ்புவனகிரி, புவனகிரி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்கள் பயனடையும்.

மேலும் சி.முட்லூர், பு.முட்லூர், காட்டுவராயன்குறிச்சி, தீத்தாம்பாளையம், கனகாம்பாளையம், மேலமூங்கிலடி, கீழமூங்கிலடி, தையாகுப்பம், அம்பலத்தாடிகுப்பம், லால்புரம், தில்லைநாயகபுரம், மேல்அனுவம்பட்டு, ஏ.மண்டபம் மற்றும்  20க்கும் மேற்பட்ட கிராமங்களும் கிராம விவசாயிகளும் பயனடைவார்கள். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனை சந்தித்து மனு அளித்துள்ளோம். மேலும் சிதம்பரம் தொகுதி எம்பி திருமாவளவனிடமும் முறையிட்டுள்ளோம் என்றார். சி.முட்லூரை சேர்ந்த ரஜினிகாந்த் கூறுகையில், கடந்த 2004ம் ஆண்டு இப்பகுதி சுனாமியால் பெரும் பாதிப்பிற்குள்ளானது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறியது. தற்போது பு.முட்லூர்-சி.முட்லூர் இடையே வெள்ளாற்றில் தடுப்பணை கட்டினால் விவசாயிகள் பலன் அடைவதோடு உப்பு நீராக மாறியுள்ள குடிநீர் நல்ல நீராக மாறி மக்கள் பயனடைவார்கள், என்றார். சி.முட்லூரை சேர்ந்த ராமச்சந்திரன் கூறுகையில், புவனகிரி ஆதிவராகநல்லூர் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டால் சி.முட்லூர் பகுதியில் குடிநீருக்கே வழியில்லாமல் போய்விடும். ஆகையால் சி.முட்லூர்-பு.முட்லூர் பாலம் அருகே தடுப்பணை கட்டினால் அரசுக்கு செலவும் குறையும். ஆகவே, இப்பகுதியில் அவசியம் தடுப்பணை கட்ட வேண்டும் இல்லையென்றால் கிராம மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார். சி.முட்லூரை சேர்ந்த வாசுதேவன் கூறுகையில், சி.முட்லூர் பகுதியில் ஏராளமான கிராமங்களில் அரும்பு உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களை ஏராளமான விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். உப்பு நீர் தேங்கியுள்ளதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. ஆதிவராகநல்லூர் பகுதியில் தடுப்பணை கட்டினால் வெறும் 5 கிராமங்கள் மட்டுமே பயனடையும். ஆனால் சி.முட்லூர்-பு.முட்லூர் இடையே பாலம் அருகே தடுப்பணை கட்டினால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவார்கள். எனவே, அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து சி.முட்லூர்-பு.முட்லூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் அருகே தடுப்பணை அமைக்க வேண்டும் என்றார்.

Tags : Mudlur ,C. Mudlur ,
× RELATED திருமாவளவனை ஆதரித்து கமல் நாளை பிரச்சாரம்..!!