×

ஏஎஸ்டிசி, ஆவின் நகர் சாலையோரம் கொட்டிய மண்ணை அகற்ற வலியுறுத்தல்

தர்மபுரி, நவ.7: தர்மபுரி நகராட்சி 10வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ஏஎஸ்டிசி நகர், ஆவின்நகர் உள்ளது. இந்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் கழிவுநீர், மழைநீர் வெளியேற முறையான வடிகால் வசதி இல்லை. இதனால், சிறு மழைக்கே ஏஎஸ்டிசி நகர் மற்றும் ஆவின்நகர் சாலை முழுவதும் மழைநீர் சூழ்ந்து விடுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் தர்மபுரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்த மழை நீரும், பிடமனேரி ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீரும் ஏஎஸ்டிசி நகர், ஆவின்நகர் முழுவதும் சூழ்ந்தது. இதனால், அப்பகுதி குடியிருப்பு வாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து தர்மபுரி வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் சார்பில், பொக்லைன் மூலம் கால்வாய் தோண்டி தண்ணீரை வெளியேற்றினர். மழைநீரை அகற்ற தோண்டப்பட்ட கால்வாயிலிருந்து எடுக்கப்பட்ட மண் குவியல், பல நாட்களாகியும் அகற்றப்படாததால், சாலை மேடு,பள்ளமாக உள்ளது.

மேலும், கால்வாய் தோண்டப்பட்ட பகுதியிலிருந்த வீடுகளுக்கு செல்லும் பாதையும், பிடமனேரிக்கு செல்லும் இணைப்பு சாலையும் துண்டிக்கப்பட்டது. குழி தோண்டியதால் 30 அடியிருந்த சாலை குறுகலாகி, 10 அடி சாலையை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால், இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு பள்ளி பஸ்கள் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள், நீண்ட தொலைவு நடந்து, பென்னாகரம் சாலைக்கு வந்து, அங்கிருந்து பேருந்துகள் மூலம் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்கின்றனர். அதேபோல, கால்வாய் வெட்டப்பட்ட திசையில் உள்ள குடியிருப்பு வாசிகளும், சாலைக்கு வர வழியின்றி தவித்து வருகின்றனர். எனவே, இப்பகுதியில் மண்ணை அகற்றி, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : ASTC ,
× RELATED ஓசூர் பெண்ணிடம் ₹12.35 லட்சம் மோசடி