கள்ளிக்குப்பம் சுங்கச்சாவடி அருகே கார் கவிழ்ந்த விபத்தில் கம்பெனி அதிகாரி பலி

அம்பத்தூர், நவ.7: அம்பத்தூர்-புழல் புறவழிச்சாலை, கள்ளிக்குப்பம் பகுதியில் தறிகெட்டு ஓடிய கார் கவிழ்ந்த விபத்தில் தனியார் கம்பெனி அதிகாரி பலியானார். மேலும், அவரது 2 நண்பர்கள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை திருவேற்காடு, வடநூம்பல் மெயின்ரோட்டை சேர்ந்தவர் லோகராஜ் (34). அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தனியார் நிறுவன அதிகாரி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. லோகராஜ் தனது நண்பர்களான பம்மல் ஸ்ரீராம் (24), குரோம்பேட்டை சத்யபிரகாஷ் (32) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு காரில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.

அம்பத்தூர்-புழல் புறவழிச்சாலை, கள்ளிக்குப்பம் சுங்கச்சாவடி அருகே அதிகாலை 3 மணியளவில் சென்றபோது திடீரென தறிகெட்டு ஓடிய கார் சாலையோரம் நின்ற லாரி மீது மோதியது. இதில், கார் அப்பளம்போல் நொறுங்கியதில் மூவரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். தகவலறிந்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே லோகராஜ் இறந்ததாக தெரிவித்தனர். மேலும் படுகாயமடைந்த ஸ்ரீராம், சத்யபிரகாஷ் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். கார் கவிழ்ந்து தனியார் கம்பெனி அதிகாரி பலியான சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>