×

பல்லாரி, சின்ன வெங்காயம் விலை மேலும் உயர்வு

நாகர்கோவில், நவ. 6 : குமரி மாவட்டத்தில் பல்லாரி, சின்ன வெங்காயம், வெள்ளை பூண்டு விலை மேலும் உயர்ந்துள்ளது. உருளைகிழங்கு விலை குறைந்துள்ளது. நாகர்கோவிலில் உள்ள கோட்டார் மார்க்கெட்டிற்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து உருளை, பல்லாரி, சின்ன வெங்காயம், வெள்ளைபூண்டு ஆகியவை விற்பனைக்கு வருகிறது. பின்னர் அங்கிருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு சில்லரை விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கோட்டார் மார்க்கெட்டில் கடந்த வாரம் மொத்த விலைக்கு பல்லாரி 52க்கு விற்பனையானது. தற்போது பல்லாரி விலை உயர்ந்து 75க்கு விற்பனை ஆகிறது. ஆனால் சில்லரை விலைக்கு பல்லாரி 80 வரை விற்பனை செய்யப்படுகிறது.  உருளை கிழங்கு கடந்த வாரம் மொத்த விலைக்கு  42க்கு விற்பனையானது. தற்போது விலை குறைந்து 27க்கு விற்பனையாகிறது. சில்லரை விலைக்கு 35க்கு விற்பனையாகிறது.

மொத்த விலைக்கு கடந்த வாரம் 55க்கு விற்பனையான சின்ன வெங்காயம் தற்போது விலை உயர்ந்து 75க்கு விற்பனையாகி வருகிறது. சில்லரை விலைக்கு 75 முதல் 80 வரை விற்பனையாகி வருகிறது. இதுபோல் வெள்ளைபூண்டு விலையும் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ வெள்ளைபூண்டு 100 முதல் 120க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது விலை உயர்ந்து ஒரு கிலோ வெள்ளைபூண்டு 160 முதல் 200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து கோட்டார் மார்க்கெட் சின்ன வெங்காய வியாபாரி காமராஜ் கூறியதாவது:  பல்லாரி பெங்களூர், புனேவில் இருந்து வருகிறது. 50 கிலோ எடைக்கொண்ட பல்லாரி மூடை கடந்த வாரம் 2600க்கு விற்பனையானது. தற்போது விலை உயர்ந்து 3750க்கு விற்பனையாகிறது.

 உருளைகிழங்கு மேட்டுபாளையத்தில் இருந்து வருகிறது. 45 கிலோ எடை கொண்ட உருளை மூடை கடந்த வாரம் மொத்த விலைக்கு 1900க்கு விற்றது. தற்போது விலை குறைந்து 1200க்கு விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களில் இருந்து வருகிறது. சின்ன வெங்காயம் 60 கிலோ எடை கொண்ட மூடை 4500க்கு விற்பனையாகிறது. இது போல் மத்தியபிரதேசத்தில் இருந்து வெள்ளைபூண்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ளைபூண்டு கிலோ ரூ.30க்கு விற்பனையானது. இதனால் அங்குள்ள விவசாயிகள் மாற்று பயிரான மல்லி பயிரிட்டனர். இதனால் அங்கு இருப்பு வைக்கப்பட்ட வெள்ளைபூண்டு தற்போது விற்பனைக்கு வருகிறது. இதனால் வெள்ளைபூண்டு விலை உயர்ந்துள்ளது. இது போல் புனேவிலும் பல்லாரி விலை குறைந்ததால் மாற்று பயிர் சாகுபடி செய்ததன் காரணமாகவும், மழைகாரணமாகவும் பலலாரி விலை உயர்ந்துள்ளது. இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்றார். 

Tags : Pallari ,
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு குற்றவாளி...