×

அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு பூதலூரில் விவசாயிகள் அறிவித்த சாலை மறியல் போராட்டம் வாபஸ்

திருக்காட்டுப்பள்ளி, நவ. 6: அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பூதலூரில் விவசாயிகள் சார்பில் நேற்று நடக்கவிருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.பூதலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் காப்பீடு செய்த 2018-2019ம் ஆண்டுக்கான இழப்பீடு தொகையை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பூதலூர் நால்ரோடு பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் கண்ணன், பூதலூர் ஒன்றிய தலைவர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் 5ம் தேதி (நேற்று) சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பூதலூர் தாசில்தார் சிவகுமார் முன்னிலையில் விவசாயிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டுறவு சார்பதிவாளர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மாரிஐயா, கூட்டுறவு சங்க கள அலுவலர் மல்லிகா, வேளாண் அலுவலர் நிவேதா, இன்ஸ்பெக்டர் ஜெயா மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர், ராஜகோபால், சுந்தரவடிவேல், பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட 21 பேருடன் பேச்சுவார்த்தை நடந்தினர்.இதில் இழப்பீடு தொகை அனைத்து விவாயிகளுக்கும் வழங்குவதாகவும், விடுபட்டுள்ள கோவில்பத்து கிராம விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு தொகை இன்னும் 15 நாட்களில் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் வேளாண் அலுவலர்கள் சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து பூதலூரில் நேற்று நடக்கவிருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.


Tags : road picket protest ,Poothalur ,
× RELATED மாநில எல்லையில் இ-பாஸ் பிரச்னை...