×

பாகூர் ஏரியின் தெற்கு பகுதியில் நீர் அளவீடு கோபுரம் இடிந்து விழுந்து சேதம்

பாகூர், நவ. 5: பாகூர் ஏரியின் தெற்கு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நீர் அளவீடு கோபுரம் இடிந்து விழுந்து சேதமடைந்ததால், நீர்மட்டத்தை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியின் இரண்டாவது பெரிய ஏரியாக பாகூர் ஏரி விளங்குகிறது. பாகூர் பகுதி புதுச்சேரியின் நெற்களஞ்சியமாக திகழ்வதற்கு இந்த ஏரி முக்கிய காரணமாக உள்ளது. சமீப காலமாக இந்த ஏரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, ஏரியினுள் நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்வது குறித்து பல்வேறு புகார்கள் எழுந்தன. அதுமட்டுமல்லாமல் ஏரிக்குள் நீர் வருவதை தடுத்து அதை வெளியேற்றும் வகையில் சில மர்ம நபர்கள் ஈடுபட்ட சம்பவமும் நடைபெற்றது.இந்த ஏரியின் நீர்மட்டத்தை அளப்பதற்காக தெற்கு பகுதியில் அளவுகோல் பொருத்தப்பட்டுள்ளது. இதை கண்காணிப்பதற்காக ஊழியர்கள் நடந்து செல்ல சிமெண்ட் நடைபாதையும், உருளை வடிவ கோபுரமும் அமைக்கப்பட்டிருந்தது. இது சரியாக பராமரிக்கப்படாததால் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென நடைபாதை பகுதி முற்றிலும் உடைந்து உள்வாங்கியது. இதனால் ஏரியின் நீர் அளவை ஊழியர்கள் கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏரி நீரில் இறங்கி சென்று தான் தண்ணீர் அளவை கண்காணிக்க முடியும். நீர்மட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் கண்காணிக்க முடியாத நிலை ஏற்படும். இதனை உடனடியாக சரிசெய்யவில்லை என்றால், அளவுகோலும் உடைந்து விழும் அபாயம் உள்ளது. எனவே புதுச்சேரி அரசு போர்க்கால அடிப்படையில் கோபுர நடைபாதை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : water level tower ,part ,Bagur Lake ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...