×

இயற்கை முறையில் களைகளை கட்டுப்படுத்தும் தொழில் நுட்பம்

தர்மபுரி, நவ.1: களைகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து, அரசு வனக்கல்லூரி மாணவர்கள், விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 4ம் ஆண்டு பட்டுப்புழுவியல் துறையில் படித்து வரும் மாணவர்களான ஹரிஹரன், கார்த்திக், சதீஷ், வசந்த், கார்த்திக், வெங்கடேசன் ஆகியோர், தர்மபுரி மாவட்டத்தில் முகாமிட்டு களப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பயிற்சியின் ஒரு பகுதியாக, சோகத்தூர் அரசு பட்டுப் பண்ணையில் இயற்கை முறையில் களைகளை கட்டுப்படுத்தும் தொழில் நுட்பம் பற்றி விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.

இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் கூறியதாவது: களைகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்த, நீர் கலக்காத நாட்டு பசு மாட்டுக் கோமியம் ஒரு குடம் (பத்து லிட்டர்) தேவை. ஒரு மாத காலம் ஆகியிருந்தால் இன்னும் சிறப்பு. முளைத்த களைச்செடியாக இருந்தால், ஒரு கிலோ கல் உப்பு தேவைப்படும். களைச்செடிகள் நன்கு வளர்ந்திருந்தால், 2 கிலோ கல் உப்பை 10 லிட்டர் கோமியத்தில் போட்டு நன்றாக கலக்க வேண்டும். பிறகு ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும். இதனுடன் வேப்ப எண்ணெய் 100 மில்லியை ஊற்றி நன்கு கலக்கி, வடிகட்டி கைத்தெளிப்பானில் களைகள் மீது தெளிக்க வேண்டும்.

அடுத்த 2 நாட்களில் அருகம்புல் தவிர, அனைத்து களைகளும் கருகி விடும். பார்த்தீனியம், கோரை உட்பட இந்த களைக்கொள்ளி பயிருக்கு எந்த தீங்கும் விளைவிப்பதில்லை. வேப்ப எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தினால், கோரைக்கிழங்கு கூட அழிந்து விடும். ரசாயன களைக்கொள்ளிகளை பயன்படுத்தினால் செலவு அதிகமாவதுடன், மண்ணிற்கும் தீங்கு விளைவிக்கிறது. ஆனால், இயற்கை களைக்கொள்ளிகளை பயன்படுத்தினால் செலவு குறைவதுடன் மண்ணிற்கும் தீங்கு விளைவிப்பதில்லை. இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குனர் வில்சன் மற்றும் ஆய்வாளர் இளையராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா