×

பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் ஏரியில் கழிவுநீரை வெளியேற்றும் ஓட்டல்கள்: சுகாதார கேடு ஏற்படும் அபாயம்


துரைப்பாக்கம்: சென்னை மாநகராட்சி 15வது மண்டலம், 200வது வார்டுக்குட்பட்ட செம்மஞ்சேரி ஏழில்முக நகர், ஜவஹர் நகர் ஆகிய பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றன.  இப்பகுதியை ஒட்டியுள்ள இரட்டை குட்டை தாங்கல் ஏரியை சுற்றி 10க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் குடிநீர் வாரியம் சார்பில் அமைக்கப்பட்டு, அதிலிருந்து பல்வேறு பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கடந்த சில  தினங்களாக மழை பெய்து வருவதால், இந்த ஏரியில் தண்ணீர்  நிரம்பி உள்ளது. இந்நிலையில் இப்பகுதியை ஒட்டியுள்ள ஐடி நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்களின் கழிவுநீர், மழைநீருடன் கலந்து இரட்டை தாங்கல் ஏரியை வந்தடைகிறது.  இதனால், ஏரி நீர் மாசடைவதுடன், இதில் இருந்து வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்தும் மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘ஏரியில் ஓட்டல் மற்றும் ஐடி நிறுவன கழிவுநீர் விடப்படுவது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. யாராவது ஆய்வுக்கு வந்தாலும், ஐடி நிறுவனம்  மற்றும் ஓட்டல்களின் உரிமையாளர்கள் அதிகாரிகளை சரிகட்டி அனுப்பி விடுகின்றனர். இதனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இதுகுறித்து உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’  என்றனர்.

Tags : lake ,public ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு