×

எடையளவு இயந்திரங்களுக்கு முத்திரையிட சிறப்பு முகாம்

புதுச்சேரி, நவ. 1:    புதுச்சேரி சட்டமுறை எடை அளவைத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி தயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  புதுச்சேரியின் பல பகுதிகளில் உள்ள அங்கன்வாடிகளில் உபயோகிக்கப்படும் எடைகள், அளவைகள் மற்றும் எடையளவு இயந்திரங்கள் ஆகியவற்றை கட்டுப்பாட்டு அதிகாரியின் உத்தரவுபடி உதவி கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் ஆய்வாளர்கள்  ஆய்வு நடத்தி வருகின்றனர். கடைகளில் பயன்பாட்டில் இருக்கும் எடையளவு இயந்திரங்கள் தராசு மற்றும் எடைக்கற்கள் ஆகியவை சரியாக உள்ளதா? என்றும் உரிய காலத்தில் எடைகள் மற்றும் அளவைகள் மீது அரசாங்க முத்திரை  புதுப்பிக்கப்பட்டுள்ளதா? என்றும் அவ்வப்போது ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.  சட்டமுறை எடையளவைத்துறை அலுவலகம் தட்டாஞ்சாவடியில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் எடைக்கற்கள் மற்றும் அளவைகள் ஆகியவற்றை சரிபார்த்து சான்றிதழ் அளிக்கப்படுகிறது. வணிகர்கள் அனைவரும் தங்களுடைய  பயன்பாட்டில் இருக்கும் எடைகள், அளவைகள் மற்றும் எடையளவு இயந்திரங்கள் ஆகியவற்றை உரிய தொகை செலுத்தி அரசாங்க முத்திரையை பதித்து அதற்குரிய சான்றிதழை பெற்று அதனை தங்களுடைய கடைகளில் பார்வையான  இடத்தில் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

 மேலும், புதிதாக எந்த ஒரு எடை, அளவை மற்றும் எடையளவு இயந்திரம் ஆகியவற்றை வாங்கும் பொழுது அதில் அரசாங்க முத்திரை பதிக்கப்பட்டுள்ளதா? என கவனித்து வாங்க வேண்டும். மின்னணு தராசு வாங்கும் பொழுது அந்த  இயந்திரத்தின் தன்மைகளை குறிப்பிடும் அடையாளத்தகடு மற்றும் அரசாங்க முத்திரை பதித்ததற்கான சான்றிதழை அவசியம் வணிகர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு இல்லாத தராசுகள் எடையளவைத்துறை ஆய்வாளர்களால்  பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை செய்யப்படுகிறது.  வணிகர்கள் நலன் கருதி அவர்கள் வியாபாரம் செய்து வரும் வியாபார மையங்களுக்கே சென்று சட்டமுறை எடை அளவைத்துறை ஆய்வாளர்கள் புதுச்சேரி பகுதிகளில் உள்ள முக்கிய வியாபார மையங்களில் கீழ்க்கண்ட நாட்களில் காலை 10  மணி முதல் மதியம் 12.30 மணி வரையில் சிறப்பு முகாம் அமைத்து எடைகள், அளவைகள் மற்றும் எடையளவு இயந்திரங்கள் ஆகியவற்றை முத்திரையிட உள்ளார்கள்.

 அதன்படி, நவ.5ம் தேதி மதகடிப்பட்டு மார்க்கெட்டிலும், 6ம் தேதி திருக்கனூர் மார்க்கெட்டிலும், 7ம் தேதி மடுகரை மார்க்கெட்டிலும், 8ம் தேதி முத்தியால்பேட்டை மார்க்கெட்டிலும், 9ம் தேதி வில்லியனூர் மார்க்கெட்டிலும், 12ம் தேதி முதல்  14ம் தேதி வரை பெரியகடை மார்க்கெட்டிலும், 15ம் தேதி பாகூர் மார்க்கெட்டிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. எனவே, வணிகர்கள் இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர்  கூறியுள்ளார்.

Tags : camping ,
× RELATED புதுகை மாவட்டத்தில் 2ம் கட்டமாக 189...