×

உலக பக்கவாத தின விழிப்புணர்வு கூட்டம்

புதுச்சேரி, நவ. 1:  உலக பக்கவாத தினம் ஆண்டுதோறும் அக்.29ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி புதுச்சேரி அரசு நலவழித்துறையின் குயவர்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உலக பக்கவாத தின  விழிப்புணர்வு கூட்டம் சுகாதார நிலைய வளாகத்தில் நேற்று நடந்தது. சுகாதார ஆய்வாளர் யசோதா வரவேற்றார். மருத்துவ அதிகாரி அஜ்மல் அகமது தலைமை தாங்கி பேசுகையில், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், புகைப்பிடித்தல், மது  அருந்துதல், ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகம் உள்ளவர்கள், உடல் பருமன்,  அதிக அளவு ஹார்மோன் மாத்திரை உட்கொள்பவர்கள் ஆகியோருக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றார்.  கஸ்தூரிபா காந்தி செவிலியர் கல்லூரி மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு சார்பில் விழிப்புணர்வு செய்யப்பட்டது. பக்கவாதத்தின் அறிகுறிகளான கை, கால் செயலிழப்பு, பார்வை மங்குதல், நினைவிழத்தல், விழுங்குவதில் சிரமம்  ஆகியவற்றை பற்றி பொது சுகாதார செவிலிய அதிகாரி கீதா எடுத்துரைத்தார். பக்கவாதத்தை தடுக்கும் முறைகளான சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ச்சியாக மருந்துa உட்கொள்ளுதல் புகை மற்றும் மது அருந்துவதை  தவிர்த்தல், உடல் பருமன் ஆகாமல் சீரான உடற்பயிற்சி செய்தல், உணவில் உப்பின் அளவை குறைத்தல், உணவில் நார்ச்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், உலர் பழங்கள், முளைக்கட்டிய தானியங்கள், துரித உணவுகளை  தவிர்த்தல் ஆகியவற்றை பற்றி சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார் விளக்கி கூறினார். கஸ்தூரிபா காந்தி செவிலியர் கல்லூரி விரிவுரையாளர் பிறைமதி, சுரேந்திரன் ஆகியோர் விளக்கப்பட காட்சிகள் மூலம் பக்கவாத நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை கிராமப்புற செவிலியர்கள், சுகாதார உதவி  ஆய்வாளர்கள் செய்திருந்தனர். கிராமப்புற செவிலியர் சுமதி நன்றி கூறினார்.

Tags : World Stroke Day Awareness Meeting ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...