×

கடலூர் மாவட்டத்தில் கனமழை 100 குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

கடலூர், அக். 31: கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரபி கடலை ஒட்டிய வங்க கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த மண்டலமாக மாறி புயலாக மாறக்கூடிய நிலை உள்ளது. இதனால் தென் மாவட்டங்களிலும் குறிப்பாக கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. இயல்பான அளவை விட கூடுதல் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்ப தொடங்கியுள்ளன. ஏரி மற்றும் ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், அலுவலகங்களுக்கு செல்லும் அரசு ஊழியர்களும் பாதிக்கப்பட்டனர். சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தோடியது. கடலூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள 100 குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது. கடலூரில் குண்டுஉப்பலவாடி, திடீர் குப்பம், குப்பன்குளம், புதுக்குப்பம், வன்னியர்பாளையம், கடலூர் முதுநகர் அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகள் மழைநீர் சூழ்ந்து காணப்படுகின்றன. இந்த தொடர் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று காலை உழவர் சந்தைகளில் விவசாய விளை பொருட்கள் குறைவாகவே கொண்டுவரப்பட்டது. கூட்டமும் குறைந்தே காணப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகளின் வருகை குறைவாக இருந்தது. நேற்று கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடலில் பலத்த மழை பெய்துகொண்டிருப்பதாலும், அதிவேக நீரோட்டம் மற்றும் ராட்சத அலைகள் காரணமாக மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர். பலத்த மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் மீன் பிடிதொழில் அடியோடு பாதிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் டெல்டா கடைமடை பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் பயிர் நடவு நடந்துள்ள நிலையில் இந்த பலத்த மழை பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் விவசாயிகளுக்கு உள்ளது. கடலூர் கடற்கரைச்சாலையில் உள்ள வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாததால் அதில் பெருக்கெடுத்தோடும் மழைநீர் வாய்க்காலில் உள்ள தடுப்புகளால் குடியிருப்புகளை நோக்கி திரும்பியுள்ளது. இதனால் ரங்கநாதன்நகர், வண்ணாரப்பாளையம், அண்ணாநகர் குடியிருப்புகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திட்டக்குடி: திட்டக்குடி பகுதியில் நெல், மக்காச்சோளம், பருத்தி, கடலை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில் தொடர்மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரத்தில் மழையால் சில பயிர் வகைகள் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் புலம்புகின்றனர். தொடர்மழை காரணமாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருவதால் நீண்ட காலமாக இப்பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் தொடர் மழை பெய்து வருவதால் பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் ஊழியர்கள் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் வெலிங்டன் ஏரி நீர் பிடிப்பு காரணமாக விவசாயம் செழிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

சிதம்பரம்: சிதம்பரம் நகரில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கி  குளம்போல் நிற்கிறது. விளங்கியம்மன் கோயில் தெரு, பெரிய வாணிய தெரு,  மாலைகட்டி தெரு, சாத்தப்பாடி தெரு, தெற்கு வாணியதெரு வைப்பு சந்து உள்ளிட்ட  பல்வேறு தெருக்களில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள்  வீடுகளில் இருந்து வெளியே செல்வதற்கு அவதியுறுகின்றனர். தெருக்களில் உள்ள  சாக்கடைகள், வடிகால் வாய்க்கால்களில் மண் மற்றும் குப்பைகள் தூர்ந்துபோய்  உள்ளதால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் சாலைகளில் குளம்போல் தேங்கி நிற்கிறது.  நகராட்சி அலுவலர்கள் சிதம்பரம் நகரில் உள்ள 33 வார்டுகளிலும் உள்ள  சாக்கடைகள், வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : dwellings ,Cuddalore district ,
× RELATED சாலையோர மின்கம்பங்களை சேதப்படுத்தும் மர்ம நபர்கள்