×

குழந்தை சுஜித் மீட்பு விவகாரம் தகவல் கிடைத்ததில் தாமதமா? அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் விளக்கம்

அரக்கோணம், அக்.31: மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை சுஜித் விழுந்தது தொடர்பான தகவல் தாமதமாக கிடைத்ததா என்பதற்கு அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று விளக்கம் அளித்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் பிரிட்டோ ஆரோக்கியராஜின் 2 வயது குழந்தை சுஜித் கடந்த 25ம் தேதி மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே உள்ள பயனற்ற ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். இதை தொடர்ந்து குழந்தையை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். மாவட்ட, மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் அப்பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்திற்கு தகவல் வந்தது. அதன்பேரில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் திருச்சிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தாமதமாக கிடைத்ததாக தகவல் பரவியது. இதுகுறித்து நேற்று தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் கூறியதாவது:

அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து கடந்த 26ம் தேதி அதிகாலை துணை கமாண்டர் ஜித்தேஷ் தலைமையில் மருத்துவர் உட்பட 36 மீட்பு படையினர் தேவையான கருவிகளுடன் பஸ், டிரக் மூலம் திருச்சிக்கு சென்றனர். அங்கு குழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆழ்துளை கிணற்றின் அருகே 1.2 மீட்டர் அகலத்திற்கு துளையிடும் பணி மேற்கொண்டனர். அப்போது கடினமான பாறைகள் இருந்ததால் துளையிடும் பணி தாமதம் ஆனது. பின்னர் ரிக் இயந்திரம் மூலம் பாறைகளை உடைத்து துளையிடும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால் மீட்பு பணி மேலும் தாமதமானது. தொடர்ந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டோம். நேற்று அதிகாலை(நேற்று முன்தினம்) இறந்த நிலையில் குழந்தை மீட்கப்பட்டது. தொடர்ந்து மற்ற பணிகளை முடிப்பதற்கு காலை 6.30 மணி ஆனது.

முதலில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் ஈடுபடுவார்கள், இதையடுத்து மாவட்ட, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அப்பணியில் ஈடுபடுவார்கள். அவர்களால் முடியாதபட்சத்தில் எங்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள். இதனால் காலதாமதம் ஏற்படும். அதன்படிதான் இந்த சம்பவத்திலும் நடந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Sujith Rescue Delay ,National Disaster Rescue Squadron ,
× RELATED ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கை...