×

சாலையை பொதுமக்கள் சீரமைத்தனர் கிண்ணக்கொரைக்கு அரசு பஸ்கள் இயக்கம்

மஞ்சூர், அக்.27::  மழையால் பாதிக்கப்பட்ட சாலையை பொதுமக்கள் களம் இறங்கி சீரமைத்ததால் 10நாட்களுக்கு பின் கிண்ணக்கொரை கிராமத்திற்கு மீண்டும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் சமீபத்தில் 10நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு விடிய, விடிய பெய்த கனமழையில் மஞ்சூர் அருகே கிண்ணக்கொரை சாலையில் தாய்சோலை, கேரிங்டன் உள்பட பல்வேறு இடங்களில் சாலையோர ராட்சத மரங்கள் வேறோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தது. கேரிங்டன் ஜெயில் தோட்டம் பிரிவு அருகே பலத்த மழையில் ராட்சத மரம் சாய்ந்ததில் சாலையின் ஒரு பகுதி பெயர்ந்து மேலிருந்து கீழ்புறம் உள்ள ரோட்டில் விழுந்தது. பெருமளவு மண் குவியலோடு மரங்கள் விழுந்து சாலையை மூடியது. இதனால் மஞ்சூரில் இருந்து கிண்ணக்கொரை, இரியசீகை, ஓசட்டி, ஆத்தட்டு, இந்திராநகர், காமராஜ் நகர், தனயகண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் சாலையில் பல்வேறு இடங்களிலும் விழுந்த மரங்கள் மற்றும் மண்சரிவுகளை அகற்றினார்கள். தொடர்ந்து சாலை துண்டிக்கப்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கிவைத்து தற்காலிக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இதைதொடர்ந்து இந்த சாலையில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் இயக்கப்பட்டது. ஆனால் அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் எல்லையோர கிராமங்களை சேர்ந்த மக்கள் கடும் அவதிகுள்ளானார்கள். எந்த ஒரு அத்தியாவசிய தேவைகளுக்கும் 30கி.மீ தொலைவுள்ள மஞ்சூருக்கே சென்று வர வேண்டிய நிலையில் அரசு பஸ்கள் இயக்காததால் தனியார் வாடகை வாகனங்களில் ரூ.200முதல் 300ரூபாய் வரை கூடுதல் கட்டணம் செலுத்தி சென்று வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அதிருப்தி அடைந்த பொதுமக்கள் கிண்ணக்கொரை பகுதிக்கு அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன் போராட்டம் நடத்தவும் முடிவு செய்தனர். இதை தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சம்பவபகுதியில் நேரில் ஆய்வு செய்தனர். பஸ்கள் திரும்பும் வகையில் சற்று விரிவு படுத்தி சாலையை சீரமைத்தால் மட்டுமே அரசு பஸ்கள் சென்று வரமுடியும் என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நெடுஞ்சாலைதுறையினர் சாலை சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தினார்கள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கிண்ணக்கொரை கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் அதிரடியாக களம் இறங்கி சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டார்கள். சாலையோரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக குவிந்து கிடந்த மண்சரிவுகள் அகற்றப்பட்டது. இதை தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக ஊட்டி கிளை அதிகாரிகள் கிண்ணக்கொரை கிராமத்திற்கு சென்று சாலையை ஆய்வு செய்தார்கள். இதையடுத்து முன்தினம் முதல் கிண்ணக்கொைர மற்றும் இரிய சீகை பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 10 நாட்கள் இடைவெளிக்கு பின் அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் எல்லையோர மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags : Roads ,
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...