×

குடந்தை சாரங்கபாணி கோயில் சித்திரை தேருக்கு புதிய வடக்கயிறு ரூ.6 லட்சத்தில் தயாரிப்பு

கும்பகோணம், அக். 25: கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சித்திரை தேருக்கு பயன்படுத்த ரூ.6 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்ட புதிய வடக்கயிறு லாரி உதவியுடன் கொண்டு வரப்பட்டன. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உலக புகழ் பெற்ற சாரங்கபாணி கோயில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேர் என்ற சிறப்பு பெற்ற இந்த தேருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் புதிய வடக்கயிறு தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி வெங்கடாஜலபதி சாரிடபுள் டிரஸ்ட் உயபதாரர்கள் மூலம் ரூ.6 லட்சம் மதிப்பில் 30 இன்ச் சுற்றளவில் சுமார் 300 மீட்டர் நீளமுடைய 2 வடங்களும், 18 இன்ச் சுற்றளவுடன் 175 அடி நீளம் கொண்ட 2 வடங்களும் என மொத்தம் சுமார் ஏழரை டன் எடையிலான தென்னை நார்களால் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள கயிறு உற்பத்தியாளர்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த 4 வடங்களும் நேற்று முன்தினம் கும்பகோணத்துக்கு லாரி மூலம் கொண்டு வரப்பட்டது. இந்த புதிய தேர் வடங்களை கோயில் செயல் அலுவலர் ஆசைத்தம்பி, தொழிலதிபர் ராயாகோவிந்தராஜன் மற்றும் கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர். 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள சித்திரை தேர் திருவிழாவில் இந்த வடங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags : Vadakarai ,Kithundai Sarangapani Temple ,
× RELATED செங்குன்றம் வடகரை பகுதியில் அரசு...