×

பருவமழை தீவிரம் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஓசூர், அக்.25:  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அந்த தண்ணீர் அப்படியே ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால் கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நந்திமலை,  தொட்டப்பள்ளப்புரம், கே.ஆர்.புரம்,  பெங்களூரு மற்றும் சர்ஜபுரம்  உள்ளிட்ட இடங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கெலவரப்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 968 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்றும் அதே அளவில் வந்து கொண்டிருந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் நீர்மட்டம் மள மளவென உயர்ந்து வருகிறது. 44.28 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 41.66 அடியாக உள்ளது.

இதையடுத்து, அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் கிருஷ்ணகிரி அணை நோக்கி பொங்கி பாய்ந்து செல்கிறது. ஆற்றில் அதிகளவில் தண்ணீர் பெருக்கெடுத்துச் செல்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேரண்டப்பள்ளி, கோபசந்திரம், பார்த்தக்கோட்டா உள்ளிட்ட கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் கூடுதல் தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளது. எனவே, தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசித்தும் வரும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Tags : Kelavarapalli Dam ,
× RELATED ஒசூர் கெலவரப்பள்ளி அணையில் நீர்...