×

பதிவு செய்யாத மருத்துவ சேவை மையங்கள் மீது கடும் நடவடிக்கை

புதுச்சேரி, அக். 25: புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மருத்துவமனை ஒழுங்கு முறை சட்டம் -2010 கீழ் புதுவை மாவட்ட பதிவு குழுவின் கூட்டம் புதுவை மாவட்ட ஆட்சியர் அருண் தலைமையில் கடந்த 21ம் தேதி நடந்தது. இதில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மாவட்ட ஆட்சியர் கீழ்க்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அனைத்து தனியார் மருத்துவமனைகள், பரிசோதனை கூடங்கள், நுண்கதிர் கூடங்கள், ஸ்கேன் மையங்கள், பல் மருத்துவமனைகள், பிஸியோதெரபி, இந்திய மருத்துவமுறைகள் (சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி மற்றும் இதர மருத்துவ சேவை மையங்கள்) ஆகியவை உடனடியாக மருத்துவமனை ஒழுங்குமுறை சட்டம்- 2010ன் கீழ் பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்ய தவறினால் மேற்படி சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

  ஏற்கனவே பலமுறை செய்தித்தாளில் இதுசம்பந்தமாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யாத மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்கள் மற்றும் மருத்துவர்கள் உடனடியே துணை இயக்குநர், பொது சுகாதார அலுவலகம், நெ.1, விக்டர் சிமோனால் வீதி, பழைய மகப்பேறு மருத்துவமனை வளாகம், புதுச்சேரி - 605 001  என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்ய தவறினால் கடும் நடவடிக்கைகள் (அபராதம் மற்றும் நிறுவனங்களை மூடுதல்) எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : centers ,
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!