×

திருவில்லிபுத்தூரில் அதிகாலை ‘பைக் சேஸ்’ 3 கி.மீ தூரம் வாலிபரை விரட்டிய போலீசார்

திருவில்லிபுத்தூர், அக். 24: திருவில்லிபுத்தூரில் அருகே, அதிகாலை வாகன சோதனையின்போது, டூவீலரில் நிற்காமல் சென்ற வாலிபரை போலீசார் 3 கி.மீ தூரம் விரட்டிச் சென்றனர். அப்போது வாலிபர் டூவீலரை போட்டுவிட்டு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவில்லிபுத்தூர் மற்றும் அருகே உள்ள கிருஷ்ணன்கோவில்  பகுதியில் நேற்று முன்தினம் பூட்டிய 2 வீடுகளை உடைத்து 134 பவுன்  நகை, ரூ.5.50 லட்சம் ரொக்கத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். இது  தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை வன்னியம்பட்டி விலக்கு பகுதியில், ஹவுசிங் போர்டு அருகே, போலீசார் வாகன  சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக டூவீலரில் வேகமாக வந்த வாலிபரை  தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட முயன்றனர். போலீசாரை பார்த்தும்,  டூவீலரை நிறுத்தாமல் திருவில்லிபுத்தூரை நோக்கி வாலிபர் சென்றார்.

இதையடுத்து  அந்த வாலிபரை, போலீசார் 3 கி.மீ தூரம் விரட்டிச் சென்றனர். இது குறித்து  திருவில்லிபுத்தூர் நகர் போலீசார் மற்றும் இரவு ரோந்து பணியில் உள்ள  போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனடிப்படையில் திருவில்லிபுத்தூர்  நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ், அந்த டூவீலரை, ஜீப்பில் விரட்டி  சென்றார். ஆனால், திருவில்லிபுத்தூரில் உள்ள திருவிக பள்ளி அருகே, டூவீலரை  போட்டுவிட்டு அந்த வாலிபர் இருட்டான பகுதியில் தப்பியோடினார். அந்த  டூவீலரை கைப்பற்றிய போலீசார், தப்பியோடிய வாலிபரை தீவிரமாக தேடி  வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு  ஏற்பட்டது.

Tags : bike chase ,Thiruviliputhur ,
× RELATED திருவில்லிபுத்தூரில் சாலையில்...