×

வங்கி ஊழியர்கள் 1500 பேர் வேலை நிறுத்தம்

திருப்பூர், அக். 23:  தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் இணைப்பை கைவிட வலியுறுத்தி திருப்பூரில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் மற்றும் பி.இ.எப்.ஐ. சார்பில் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. மத்திய அரசு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை இணைக்கும் மசோதாவை சமீபத்தில் நிறைவேற்றியது. இந்த வங்கிகள் இணைப்பின் மூலம் வங்கிகள் கொடுத்த கடனை திருப்ப பெற முடியாத சூழல் ஏற்படும் என கூறி வங்கிகள் இணைப்பை கைவிடவேண்டும், என பல தரப்பட்டோரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக வங்கி ஊழியர்கள் சங்கமும் போராடி வருகிறது. இந்நிலையில் நேற்று வங்கி ஊழியர்கள் சங்கங்களின் சார்பில் வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள 350 வங்கி கிளைகளில் பணியாற்றக்கூடிய சுமார் 1500 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தால் திருப்பூர் மாவட்டத்தில் சுமார் ரூ.1000 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வங்கி ஊழியர் சங்க செயலாளர் மனோகரன் கூறினார். ஆர்ப்பாட்டம்: மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டவுன்ஹால் அருகே உள்ள ஆந்திரா வங்கி கிளையின் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ராதாகிருஷ்ணன், ரவிபாபு உள்ளிட்ட ஏராளமான வங்கி ஊழியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags : bank employees ,
× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...