×

நிலத்தை தான செட்டில்மென்ட் செய்ய லஞ்சம் வாங்கி கைதான சார்பதிவாளர் சஸ்பெண்ட் வேலூர் சரக பத்திரப்பதிவு டிஐஜி உத்தரவு

வேலூர், அக்.16: காட்பாடியில் நிலத்தை தான செட்டில்மென்ட் செய்ய 1 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான சார்பதிவாளரை சஸ்பெண்ட் செய்து பத்திரப்பதிவு வேலூர் சரக டிஐஜி பிரபாகரன் நேற்று உத்தரவிட்டார். காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்தவர் ஸ்ரீராமுலு என்பவரது மகன்கள் சசிகுமார், விஜயகுமார். இவர்கள் கழிஞ்சூரில் தந்தை ஸ்ரீராமுலுவின் பூர்வீக சொத்துக்களான நிலம், வீடு, காலி வீட்டுமனைகள் ஆகியவற்றை தான செட்டில்மென்ட் செய்துக் கொள்ள முடிவு செய்தனர். இதற்காக சசிகுமார் காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று விவரங்களை கேட்டறிந்தார். அப்போது, சார்பதிவாளர் தேவராஜன்(53), நிலத்தை தான செட்டில்மென்ட் செய்ய ₹3 லட்சம் லஞ்சம் கேட்டாராம். இதையடுத்து பேரம் பேசியதில் 1 லட்சம் லஞ்சம் கொடுத்தால், பத்திரப்பதிவு செய்து கொடுப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து சசிகுமார் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து போலீசாரின் வழிநடத்துதலின்படி கடந்த 11ம் தேதி மதியம் 3 மணியளவில் சசிகுமார் காட்பாடி சார்பதிவாளர் அலுவலகம் சென்றார். அப்போது, அங்கிருந்த பத்திர எழுத்தர் சந்திரமோகனிடம் 1 லட்சம் கொடுக்கும்படி, சார்பதிவாளர் தேவராஜன் கூறியுள்ளார். அதன்படி சசிகுமார் லஞ்சம் கொடுக்கும்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான குழுவினர் சார்பதிவாளர் தேவராஜன், பத்திர எழுத்தர் சந்திரமோகன் ஆகிய 2 பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் பத்திரப்பதிவு துறைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிக்கை அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பத்திரப்பதிவு ஐஜி உத்தரவின் பேரில் விசாரணை நடத்திய பத்திரப்பதிவு வேலூர் சரக டிஐஜி பிரபாகரன், சார்பதிவாளர் தேவராஜனை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.

Tags : Dept. ,Vellore Sarga ,
× RELATED சசிகலாவின் பினாமி சொத்துக்களை வருமான...