×

வேலூர் மாவட்ட எல்லையில் 5 மதுக்கடைக்கு 3 நாள் விடுமுறை கலெக்டர் தகவல் ஆந்திர மாநிலத்தில் தேர்தலையொட்டி

வேலூர், மே 8: ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி வேலூர் மாவட்ட எல்லையில் உள்ள 5 டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆந்திர மாநிலத்தில் வரும் 13ம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திர மாநில எல்லைக்கு அருகில் உள்ள வேலூர் மாவட்ட எல்லையிலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் இயங்கி வரும் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள், அதனை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்துஸ்து உள்ள ஓட்டல்களில் இயங்கும் மதுகூடங்கள் வரும் 11ம் தேதி காலை 10 மணி முதல் 13ம் தேதி இரவு 12 மணி வரை முடியிருக்க வேண்டும் என ஆந்திர மாநில தலைமை தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டத்தில் வி.எஸ்.புரத்தில் இயங்கி வரும் கடை எண்.11035 மற்றும் மோர்தானா டேம் அருகில் தனகோண்டபள்ளியில் கடை எண் 11050 ஆகிய 2 மதுக்கடைகளும், காட்பாடி வட்டத்தில் எருக்கம்பட்டு பகுதியில் இயங்கி வரும் கடை எண்.11274 பொன்னை கணேஷ்நகரில் இயங்கும் கடை எண் 11276 மற்றும் சேர்க்காடு அண்ணாமலை நகரில் கடை எண் 11277 ஆகிய 3 கடைகள் மாநில எல்லையில் அமைந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் 5 டாஸ்மாக் கடைகள் ஆந்திர மாநில தேர்தலையொட்டி வரும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை மூடிவைக்க உத்தரவிடப்படுகிறது. இந்த நாட்களில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post வேலூர் மாவட்ட எல்லையில் 5 மதுக்கடைக்கு 3 நாள் விடுமுறை கலெக்டர் தகவல் ஆந்திர மாநிலத்தில் தேர்தலையொட்டி appeared first on Dinakaran.

Tags : Vellore district border ,Andhra state ,Vellore ,Vellore district ,Collector ,Subbulakshmi ,
× RELATED ஆந்திரா மாநிலம் சித்தூர்...