×

நெருங்குது சீசன் பழநியில் முளைக்கும் திடீர் உணவு கடைகள் கண்காணிக்க கோரிக்கை

பழநி, அக். 10: சீசன் நெருங்குவதால் பழநியில் முளைக்கும் திடீர் உணவுக் கடைகளை கண்காணிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பழநி கோயிலில் நவம்பர் மாதம் துவங்கி ஜூன் மாதம் வரை ஐயப்ப பக்தர்கள் வருகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், கோடை விடுமுறை தினங்கள் என 6 மாத காலத்திற்கு பக்தர்கள் கூட்டம் அதிகளவு இருக்கும். இவர்களிடம் விற்பனை செய்வதற்காக அடிவாரம் பகுதியில் ஏராளமான அளவில் பொம்மைக் கடைகள் மற்றும் தற்காலிக உணவு கடைகள் ஏற்படுத்தப்படும். இக்கடைகளுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவுபொருட்கள் பிளாஸ்டிக் தட்டுக்களில் பிளாஸ்டிக் பேப்பர் வைத்து வழங்கப்படுகிறது. சூடான உணவு பொருட்களால் பேப்பர் உருகி நோய் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

இவ்வாறு உணவு வழங்குவது தடை செய்யப்பட்டிருந்தும் அடிவாரப் பகுதிகளில் பிளாஸ்டிக் பேப்பர்களின் பயன்பாடு வருடந்தோறும் தங்கு தடையின்றி நடைபெறும். எச்சில் தட்டுகளை முறையாக கழுவாமால் அப்படியே மற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், பக்தர்கள் சாப்பிட்டு விட்டு அந்த இடத்திலேயே கைகழுவுவதாலும், எச்சில் இலைகளை அதே இடத்தில் போட்டு விடுவதாலும் அநேக இடங்களில் மாடு, ஆடு, நாய் உள்ளிட்ட விலங்கினங்கள் சுற்றித் திரிந்து கொண்டிருப்பதால் போக்குவரத்து பாதிப்பும் அதிகளவில் ஏற்படுகிறது. மேலும், துர்நாற்றம் ஏற்பட்டு நோய் அபாயமும் உண்டாகிறது. இட்லி போன்றவை வெண்மையாக இருப்பதற்கும், இலகுவாக இருப்பதற்கும் வேதிப்பொருட்கள் கலப்பதாலும் பக்தர்களுக்கு பின்விளைவுகள் ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் உணவு பொருட்களின் தரக்குறைபாடுகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : season ,
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு