×

குடிமை பொருள் வழங்கல்துறை முன்பு மீண்டும் போராட்டத்துக்கு தயாரான பாப்ஸ்கோ ஊழியர்கள்

புதுச்சேரி,  அக். 9: புதுச்சேரியில் பாப்ஸ்கோ ஊழியர்கள் நிலுவை சம்பளத்தை கேட்டு  குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன், மீண்டும் போராட்டத்துக்கு  தயாரான நிலையில், நிர்வாகிகளிடம் இயக்குனர் வல்லவன் பேச்சுவார்த்தை  நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். புதுச்சேரி பாப்ஸ்கோவில்  பணியாற்றும் ஊழியர்களுக்கு 3 வருடமாக சம்பளம் வழங்கப்படாத நிலையில், கடந்த  பட்ஜெட்டில் ரூ.7 கோடியை அரசு ஒதுக்கியிருந்தது. இதில் 2015, 2016ம்  ஆண்டுக்கான இலவச அரிசிக்கு வழங்க வேண்டிய பாக்கி வழங்கப்படாத நிலையில்  அதற்கான தொகையை செலுத்த குடிமை பொருள் வழங்கல் துறை நிர்வாகம் நடவடிக்கை  மேற்கொண்டது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாப்ஸ்கோ ஊழியர்கள்,  தங்களுக்கு ஊதியம் வழங்க ஒதுக்கப்பட்ட நிதியை வேறு பணிக்கு செலவிடுவதா என  எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமை பொருள்  வழங்கல் துறையை முற்றுகையிட்டனர். அவர்களை கோரிமேடு போலீசார்  சமாதானப்படுத்தி அனுப்பினர்.

இந்த நிலையில், நேற்று காலை மீண்டும்  பெண்கள் உள்பட 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள் குடிமை பொருள் வழங்கல் துறை  அலுவலகம் முன் போராட்டத்துக்கு தயாராகினர். தகவல் கிடைத்து வந்த  கோரிமேடு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், எஸ்ஐ கலையரசன் தலைமையிலான போலீசார்  அவர்களை அலுவலகத்துக்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.  பின்னர்  சங்க நிர்வாகிகளான கோவர்த்தனன், சங்கர் உள்ளிட்ட 5 பேரை பேச்சுவார்த்தைக்கு  தொழிலாளர் நலத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இயக்குனர்  வல்லவனிடம் கோாிக்கையை அவர்கள் முன்வைத்தனர். அப்போது பதிலளித்த  இயக்குனர், ஏற்கனவே இலவச அரிசிக்கு வழங்க வேண்டிய பணத்தை நீதிமன்ற  உத்தரவுக்கிணங்க செலுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். மீதமுள்ள பணத்தை பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு வழங்க அரசு கேட்டுக் கொண்டால் வழங்க  நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் அனைவரும்  போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து முதல்வர்  நாராயணசாமியை விரைவில் சந்தித்து பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க  அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி வலியுறுத்த முடிவு செய்துள்ளனர்.

Tags : Popsco ,
× RELATED பாப்ஸ்கோ பிராந்தி கடைகளை தனியாருக்கு...